ராதாபுரம் ஜிஹெச்சில் 108 ஆம்புலன்சை இயக்க டிரைவர் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு

ராதாபுரம், மே 13: ராதாபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்சை இயக்க டிரைவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் தவிக்கின்றனர். ராதாபுரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பல்வேறு கிராம மக்கள் மருத்துவமனையை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இங்குள்ள நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அல்லது நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை ராதாபுரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது ராதாபுரம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் இருந்தும் அதை இயக்குவதற்கு டிரைவர்மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமல் சமையலறையில் ஓரம் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

ராதாபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா அன்று கூட இந்த ஆம்புலன்ஸ் இயக்குவதற்கு யாரும் இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இதே நிலை நீடித்து வருவதால் நிறைய நோயாளிகள் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் கள ஆய்வு நடத்தி 108 ஆம்புலன்சை இயக்க உரிய பணியாளர்களை நியமனம் செய்து 24 மணி நேரமும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post ராதாபுரம் ஜிஹெச்சில் 108 ஆம்புலன்சை இயக்க டிரைவர் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: