சித்தரிக்கப்பட்ட வான்வழி தாக்குதலின் போது, தீப்பற்றக் கூடிய பொருட்களுடன் வைக்கப்பட்டிருந்த தொட்டி வடிவ கட்டுமானத்தில் தீப்பிடித்ததாக சித்தரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து அங்கு இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, காணாமல் போனவர்களை அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, ஆம்புலன்ஸ் மூலம் அவசரகால பகுதிகளுக்கும், மருத்துவமனைக்கும் கொண்டு செல்வது, மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது போன்றவை செய்து காட்டப்பட்டன. சென்னை துறைமுகத்தின் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகத்தை தாக்கினால் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்புடன் வெளியேற்றுவது, பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்வது போன்ற ஒத்திகை நடந்தது. அதேபோல் துறைமுகத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆயில் சேமிப்பு கிடங்கை தாக்கினால் எவ்வாறு எதிர்கொள்வது என்ற ஒத்திகை நடத்தப்பட்டது.
போர்க்கால சூழ்நிலையில் அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுவது, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வது போன்ற ஒத்திகை சம்பவங்கள் போர் ஒத்திகையில் இடம்பெற்றன. போர்க்காலங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக்காக தேசிய மாணவர் படையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போருக்கு பிறகு நேற்று பெரிய அளவிலான போர் ஒத்திகை நடந்தது. இந்த போர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வில் துறைமுகம் பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் ஜிஎம் தங்ஜோம், பூக்கடை காவல் துணை ஆணையர் சுந்தரவடிவேல் மற்றும் கமாண்டோ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள், தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் மோப்ப நாய் ஷோபியுடன் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோல, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் போர் ஒத்திகை நேற்று மாலை நடத்தப்பட்டது. இதில், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, தமிழ்நாடு காவல்துறை இணைந்து போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை கேட்டறிந்து, பாதுகாப்புபற்றி ஒத்திகை நடத்தப்பட்டது. இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு படையின் முதன்மை அதிகாரி விஷால்குமார் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ‘போர் நடந்தால் சற்று நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழு சென்று விடும். கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளே நடந்த போர் பாதுகாப்பு ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது’ என்றார்.
The post மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தலின்படி சென்னை துறைமுகம், கல்பாக்கத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.
