வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்குகள் புதிய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: 15ல் விரிவான விசாரணை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராக தொடரப்பட்ட 140 மனுக்களை கடந்த மாதம் 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 5ம் தேதி வரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமை யிலான சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘வக்பு திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து பிரமாணப் பத்திரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து விரிவாக விசாரணை நடத்த வேண்டும். அதற்கான போதிய கால அவகாசம் தற்போது கிடையாது. மேலும் இந்த வழக்குகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவசரத்தில் விசாரணை நடத்தி முடித்து உத்தரவிட முடியாது.

எனவே வக்பு திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் வரும் 15ம் தேதி பட்டியலிட்டு விசாரிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டார். இதில் தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கண்ணா, வரும் 14ம் தேதியோடு ஓய்வுபெற உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்கு வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால், அதுவரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா நேற்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post வக்பு சட்ட திருத்தம் தொடர்பான வழக்குகள் புதிய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்: 15ல் விரிவான விசாரணை; உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: