20 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் கோயிலில் மே 4ல் கும்பாபிஷேகம்

விகேபுரம்,ஏப்.29: பாபநாசத்தில் பிரசித்திபெற்ற பாபநாச சுவாமி கோயிலில் வரும் மே 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நேற்று துவங்கின. இதில் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். முதல் யாகசாலை பூஜை மே 1ல் தொடங்குவதால், அதற்காக பந்தல் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் தாமிரபரணி நதிக்கரையையொட்டி உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலானது நவ கைலாயத்தில் முதலாவது தலமாக சூரியனுக்கு அதிபதியாக விளங்குகிறது. பாரம்பரியமிக்க இக்கோயிலில் கடந்த 2005 செப்.4ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

எனவே இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பாலாலய பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணி வேலைகள் துவங்கப்பட்டன. இதில் கோபுர விமானம், கோயிலை சுற்றி தடுப்புச்சுவர் மற்றும் கோயிலின் மேற்கூரை பராமரிப்பு பணி, வர்ணம் பூசும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாச சுவாமி கோயிலில் மே 4ம் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி முதல் யாகசாலை பூஜை வரும் மே 1ம் தேதி நடக்கிறது. இதற்காக பந்தல் அமைக்கும் பணி நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 4.25 மணியளவில் மங்கள இசையுடன் துவங்கியது.

மாலை 5 மணியளவில் வேத பாராயணம், 5.30 மணியளவில் திருமுறை பாராயணம், மாலை 6.05 மணி முதல் இரவு 8 மணி வரை வரையஜமாநர் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தனபூஜை, ப்ராஹ்மண அனுக்ஞை, தேவதா அனுக்ஞை, தீபாராதனை நடந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நேற்று காலை 9.05 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து மஹாலக்ஷ்மி ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை, அச்வ பூஜை, த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ப்ரவேச பலி, க்ராம பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

The post 20 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் கோயிலில் மே 4ல் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: