இந்தி படம் பார்த்து கொள்ளையடிக்க வந்தவர்களை ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த சென்னை போலீஸ்: செல்வப்பெருந்தகை பாராட்டு


சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று காவல் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசியதாவது: தமிழ்நாட்டில் காவல் துறை எதைச் செய்தாலும் தவறு, குற்றம் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் சமீபத்தில் வட மாநிலத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டினர். அவர்கள் இந்தி திரைப்படத்தில் வருவதைப்போல, தங்களுடைய உடைகளையெல்லாம் மாற்றிக்கொண்டு ஒருவன் விமானத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். ஒருவன் டிக்கெட் வாங்கும் கவுன்டரில் நின்று கொண்டிருக்கிறான்.

ஒருவன் ரயில் மூலமாக ஓங்கோல் வழியாகச் சென்று கொண்டிருக்கிறான். ஆனால், தமிழக காவல் துறை விமானத்துக்குள் சென்று, இருக்கையிலே கைது செய்து வெளியிலே இழுத்து வருகிறார்கள். இன்னொரு காவல் துறை ஆய்வாளர் வரிசையிலே நின்று டிக்கெட் வாங்க இருந்தவனை கைது செய்கிறார். மற்றொருவரை ஓங்கோலூரிலே கைது செய்கிறார்களென்றால், தமிழக காவல் துறை எவ்வளவு திறமையாகச் செயல்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உங்களுடைய கைவரிசையைக் காட்ட முடியாது என்று ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதைப்போல கைது செய்கிறார்கள்.

இந்தி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இங்கு கொள்ளையடிக்க வருகிறார்கள். தமிழக காவல் துறையினர் ஆங்கில திரைப்படத்தைப் பார்க்கிறார்கள். ஏனென்றால், நாம் இந்தியை பெரிதாக பார்ப்பதும் கிடையாது, படிப்பதும் கிடையாது. ஆங்கிலத்தை கற்றுக் கொண்டதால் காவல் துறை அதிகாரிகள் ஆங்கில திரைப்படம் போல் ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்படம் மாதிரி கையாண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் திரைப்படத்தைப் பார்த்தவர்கள் கயவாளிகளைக் கைது செய்கிறார்கள். இந்தி திரைப்படத்தை பார்த்தவர்கள் கோட்டை விடுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

The post இந்தி படம் பார்த்து கொள்ளையடிக்க வந்தவர்களை ஜேம்ஸ்பாண்ட் பட ஸ்டைலில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த சென்னை போலீஸ்: செல்வப்பெருந்தகை பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: