திருவாரூர், ஏப். 11: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ளவர்கள் வரும் 28ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிசத்துணவு மையங்களில், 163 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் நேரடி நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யபடவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை அந்தந்த வட்டார அலுவலங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் இந்த பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு கால முறைஊதியத்தில் (ஊதிய நிலை ஒன்று ரூ.3000 முதல் ரூ -9000 வரை) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்குகல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்விஆகும்.
இப்பணிக்கு வயது தகுதி பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர்களுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும், பழங்குடியினர் 18 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்கவேண்டும். வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருக்கவேண்டும். காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்திசெய்து தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிப்பதற்கான கடைசிநாள் வரும் 28ந் தேதி ஆகும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்பஅட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று போன்றவற்றின் நகல் இணைக்கப்படவேண்டும். விதவைகள்,கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்கவேண்டும். நேர்முகத் தேர்வின்போது அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது என்றும், நேர்முகதேர்வு அழைப்பாணை கிடைக்கப்பெற்றதால் மட்டுமே ஒரு விண்ணப்பதாரருக்கு பணிநியமனம் கோர உரிமை கிடையாதுஎன்றும், காரணம் ஏதும் குறிப்பிடாமல் நியமனஅறிவிப்பு அறிக்கையினை ரத்து செய்வதற்கு, திரும்பபெறுவதற்கு, திருத்துவதற்கு கெடு தேதியினை நீட்டிப்பதற்கு கலெக்டருக்கு உரிமையுண்டு எனதெரிவிக்கப்படுகிறது.
மேலும் விண்ணப்பம் மற்றும் இனசுழற்சிவிவரங்களை திருவாரூர் மாவட்ட www.tiruvarur.nic.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post திருவாரூர் மாவட்டத்தில் சத்துணவு மைய உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
