ராமேஸ்வரம்-மைசூரு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

மானாமதுரை, ஏப்.26: கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து மானாமதுரைக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்படி இந்த சிறப்பு ரயிலில் ஏசி-2 அடுக்கு பெட்டிகள் 2, ஏசி-3 அடுக்கு பெட்டிகள் 6, ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் 9, முன் பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொதுபெட்டிகள் 2, ஜெனரேட்டர் பெட்டிகள் 2 உள்ளிட்ட 21 பெட்டிகளுடன் கடந்த மார்ச் 11ம் தேதி (வண்டி எண்:06237) மாலை 6.35 மணிக்கு மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மைசூரில் இருந்து மாண்டியா, மத்தூர், ராமநகரம், கெங்கேரி, கேஎஸ்ஆர் பெங்களூரு, பங்காரப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களை கடந்து மதுரை வழியாக மறுநாள் காலை 09.15 மணிக்கு மானாமதுரை நிலையத்திற்கு வந்தது.

பாம்பன் பாலப்பணிகள் முடிவடையாமல் இருந்ததாலும், மார்ச் மாதத்தில் பள்ளி கல்லூரி தேர்வு நேரம் என்பதாலும் வணிகர்கள் மார்ச் மாதம் கொள்முதல் விற்பனைக்காக வெளியூர் செல்லாமல் இருந்ததால் இந்த ரயிலில் குறைவான பயணிகளே பயணித்தனர். தற்போது பாம்பன் பாலப்பணிகள் முடிந்து ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்படுவதால் மைசூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்பயணி சரவணன் கூறுகையில், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவிப்பு இல்லாததாலும், பெரிய நகரங்கள் வழியாக வந்தாலும் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரி தேர்வு காலங்கள் என்பதாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் ரயில் கிளம்பும் வரை முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் நிரம்பவில்லை.

முன்பதிவில்லாத பெட்டிகளில் மதுரைக்கு ஒரு சில பயணிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். பயணிகள் இன்றி காலியான பெட்டிகளுடன் மானாமதுரை நிலையத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு சென்றது.தற்போது ராமநாதபுரத்தில் இருந்து ஞாயிற்று கிழமைகளில் ஹூப்ளிக்கு (வண்டி எண்: 07356) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. அதே போல ராமேஸ்வத்தில் இருந்து மைசூருக்கு சனிக்கிழமை மாலை நேரத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டால் பெங்களூர் மைசூர் செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். என்றனர்.

The post ராமேஸ்வரம்-மைசூரு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: