திருமங்கலம், ஏப். 25: திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைந்துள்ளது. இதில் மதுரைக்கு செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் சென்று வருகின்றன. இதற்கிடையே மதுரையிலிருந்து வரும் சர்வீஸ் ரோடானது கப்பலூர் கிராமத்தின் வழியாக வந்து டோல்கேட்டினை சென்றடைவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகவே மதுரையிலிருந்து திருமங்கலம் வரும் அனைத்து டவுன்பஸ்களும் வந்து செல்கின்றன. இதில் கடந்த சில மாதங்களாக கனரக வாகனங்கள் டோல்கேட்டினை ஒட்டி சர்வீஸ் ரோட்டில் நிறுத்திவைக்கப்படுகின்றன. இந்த வாகனங்கள் பலமணி நேரம் வரை நிறுத்திவைக்கப்படுவதால் சர்வீஸ் ரோட்டில் வரும் டவுன் பஸ்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
குறைந்தது மூன்று அல்லது நான்கு லாரிகள் குறிப்பாக சிட்கோவிற்கு சரக்கு ஏற்றி வரும் வடமாநில லாரிகள் வரிசையாக சர்வீஸ் ரோட்டில் நிறுத்தி வைக்கப்படுவதால் டவுன்பஸ்கள் எளிதாக செல்ல இயலவில்லை. மேலும் கப்பலூர் செல்லும் பலரும் சர்வீஸ் ரோட்டில் எதிர் திசையில் தங்களது வாகனங்களில் வருவதால் டவுன் பஸ்களுக்கு விபத்து அபாயத்தினை உண்டாக்கி வருகின்றன. எனவே கப்பலூர் டோல்கேட்டின் சர்வீஸ் சாலை பகுதியில் கனரக லாரிகளை நிறுத்த அனுமதிக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற லாரிகளை சிட்கோ பகுதியில் நிறுத்திவைக்க உத்தரவிடவேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் திருமங்கலம் நகர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கப்பலூர் டோல்கேட் பகுதியில் சர்வீஸ் ரோட்டை மறைத்து நிறுத்தப்படும் லாரிகள்: போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.
