கோடைகாலத்தில் ஆடுகளை பராமரிக்கும் வழிமுறைகள்: கால்நடைத்துறையினர் விளக்கம்

மதுரை, ஏப். 25: கோடைகாலத்தில் ஆடுகளுக்கான பராமரிப்பு மேலாண்மை குறித்து கால்நடைத்துறை சார்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக வெள்ளாடுகளில் வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் செம்மறியாடுகளில் உடலில் ரோமங்கள் அதிகமாக இருப்பதால், அவற்றுக்கு வெப்ப அயர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள் அதிகமாக இருக்கும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது ஆடுகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மேய்ச்சலுக்கு விடலாம். அதேபோல் மாலை 3.30 மணி முதல் 6 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பலாம்.

ஒரே பகுதியில் ஆடுகளை மேய்க்காமல் சுழற்சி முறையில் இடமாற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் ஆடுகள் புற்களைத் தேடுவதற்காக செலவிடும் நேரம் மற்றும் உடல் ஆற்றல் செலவு ஆகியவை குறைவதோடு மேய்ச்சல் தன்மையும் அதிகரிக்கும். பருவ மழை காலங்களில் பசுந்தீவனம் அதிகமாக இருக்கும். அப்போது அவற்றினை ஊறுகாய்த் தீவனமாக மாற்றிச்சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இவற்றை கோடை காலத்தில் ஆடுகளுக்கு உணவாக அளிக்கலாம். தற்போது ஊறுகாய் புல் தயாரிக்கத் தேவையான பைகள் வேளாண் அலுவலகத்தில் கிடைக்கின்றன. காய்ந்த மேய்ச்சல் நிலம் உள்ள பகுதிகளில் வேளாண் உபரி பொருள்கள் அல்லது மர இலைகள் அல்லது புண்ணாக்கை ஆடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். பால் கொடுக்கும் ஆடுகளுக்கு தேவையான சோடியம் மற்றும் பொட்டாசியம் முதலியவற்றை சத்தூட்டிகளாக அளிக்கலாம்.

உப்புக் கட்டிகளைப் பட்டிகளில் கட்டுவதன் மூலம் தேவையான தாது உப்புச்சத்துக்களை ஆடுகளுக்கு வழங்கலாம். கோடை வெயிலின் தாக்கத்தால் ஆடுகள் பலவும் சரியாக தீவனம் உட்கொள்ளாமல் போகலாம். இதுபோன்ற நிலையில் அவற்றுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை போக்கவும், வளர்சிதை வெப்ப உற்பத்தியைக் குறைக்கவும், கொழுப்பு செரிவூட்டப்பட்ட தீவனங்களை அளிக்கலாம். மேலும் ஆடுகளுக்கு உடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க வைட்டமின் ஏ, இ மற்றும் சி உள்ளிட்டவற்றை வழங்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post கோடைகாலத்தில் ஆடுகளை பராமரிக்கும் வழிமுறைகள்: கால்நடைத்துறையினர் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: