எந்த வித ரசாயன உரமும் கலக்காத உணவு: சாலையோரங்களில் நுங்கு விற்பனை ஜோர்

கந்தர்வகோட்டை, ஏப். 23: எந்த வித ரசாயன உரமும் கலக்காதது என்பதால், சாலை யோரங்களில் நுங்கு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கிராமங்கள் அதிக அளவில் கொண்ட பகுதி. இங்கு அரசு நிலங்களிலும், குளக் கரைகளிலும் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. அம்மரங்களில் தற்சமயம் நுங்கு காய்க்க தொடங்கி உள்ளது. அதனை இப்பகுதியை சேர்ந்தவர்கள் பனைமரங்களில் ஏறி நுங்குகளை வெட்டி வந்து சாலையோரங்களில் வைத்து முழு நுங்குகளை சீவி நுங்கு சுளைகளாக விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து நுங்கு விற்பவர்கள் கூறுகையில், எந்ததொரு ரசாயன மருந்தும் இல்லாமல் இயற்கையாக நமக்கு கிடைக்கும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு ஆகும். நடப்பு காலங்களில் தென்னைக்கு கூட உரம் வைக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால் பனை மரத்திற்கு எந்த வித ரசாயன உரமும் யாரும் வைப்பதில்லை. நுங்கு சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறைகிறது. வாய்ப்புண் வாயிற்று புண்களுக்கு வெயில் காலத்தில் நுங்கு சிறந்தது என கூறுகிறார்கள். சாலையில் செல்லும் ஏழை முதல் செல்வந்தர் வரை நின்று நுங்கு வாங்கி சாப்பிட்டும், வாங்கியும் செல்லுகிறார்கள். ரசாயன கலப்பற்ற இயற்கை உணவுகளை சாப்பிட பொதுமக்கள் முன் வர வேண்டும் என்றனர்.

The post எந்த வித ரசாயன உரமும் கலக்காத உணவு: சாலையோரங்களில் நுங்கு விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Related Stories: