தமிழ்நாடு ஆளுநருக்கு பிறப்பித்த உத்தரவு கேரளா அரசுக்கும் பொருந்துமா என்று பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்து ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது போன்றே கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

அதில், ‘‘கேரளா சட்டப்பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்களுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். மேலும் இரண்டு மசோதாக்களை அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். குறிப்பாக கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட எட்டு முக்கிய மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் உள்ளது. சர்ச்சைக்குரிய போலீஸ் திருத்த சட்ட மசோதாவுக்கு மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு பரிந்துரையுடன் கூடிய ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட இரண்டு ரிட் மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 8ம் தேதி அம்மாநில ஆளுநருக்கு வழங்கிய தீர்ப்பு என்பது கேரளா அரசுக்கும் பொருந்தும் என்பதால், எங்களது விவகாரத்திலும் உச்ச நீதிமன்றமே ஒரு இறுதி முடிவை எடுக்க வேண்டும். குறிப்பாக கேரளா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நான்கு முக்கிய மசோதாக்கள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது.

இதனால் அரசின் நல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்ற முடியாமல் நிலுவையில் உள்ளது என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, \”தமிழ்நாடு வழக்கின் சாராம்சங்கள் வேறு என்பதால், மசோதா விவகாரத்தில் கேரளா அரசு தொடர்ந்த வழக்கிற்கு அது கண்டிப்பாக பொருந்தாது. எனவே அம்மாநில கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் முன்னிலையில் தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில் கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக நாங்கள் படித்து பார்க்கிறோம். அதன் பின்னர் அந்த உத்தரவு கேரளா ஆளுநர் விவகாரத்தில் பொருந்துமா அல்லது இல்லையா என்பது குறித்து நாங்கள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கிறோம் எனக்கூறி, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post தமிழ்நாடு ஆளுநருக்கு பிறப்பித்த உத்தரவு கேரளா அரசுக்கும் பொருந்துமா என்று பரிசீலனை: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: