கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண்

*தேனியில் பரபரப்பு

தேனி : கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுக்களை அளிக்க வந்ததால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில், நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு பெண் திடீரென தான் கொண்டு வந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை எடுத்து அவரது தலைமீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனை அப்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பார்த்து உடனடியாக அப்பெண்ணை தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டனர். இதனையடுத்து, அப்பெண்ணை 108 ஆம்புலன்ஸ் வேன் மூலமாக தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

தீக்குளிக்க முயன்ற பெண் குறித்து விசாரித்தபோது, பெரியகுளம் தாலுகா, கெங்குவார்ட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் மனைவி கனிப்பிரியா(35). இவரது கணவர் சிவக்குமார் பெரியகுளம் சப்.கலெக்டர் அலுவலகத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.

இவர்களுக்கு திருணமாகி 14 வருடமாகிறது. இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில், சிவக்குமாருக்கும், கனிப்பிரியாவிற்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், கனிப்பிரியா வழக்குக்காக அலைந்து திரிந்த நிலையில், அவரது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டும் சிவக்குமார் நீதிமன்ற வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் தர முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த கனிப்பிரியா ஜீவனாம்சம் கேட்டு தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இச்சம்பவத்தால் தேனி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கேட்டு கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற பெண் appeared first on Dinakaran.

Related Stories: