மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடத்தப்பட்ட விரைவு வினாடி வினா (ஹேக்கத்தான்) போட்டியில், நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் நிதி மற்றும் கணக்கியல் துறை மாணவர்கள் தாங்கள் பெற்ற வெற்றிக் கோப்பையை துணை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: 1986ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இதே நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் தான் முதலாவதாக வீதிக்கு வந்து போராடின மாணவர்கள் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உண்டு.
தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயல்கிறார்கள். மும்மொழிக் கொள்கை கொண்டு வருகின்றார்கள், நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், இந்தித் திணிப்பு கொண்டு வருகின்றார்கள், புதிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயர்களில் இதெல்லாம் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பது தான். இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இதனை சரியாக புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் எல்லாம் மாணவர்கள் உயர்கல்விப் படிப்பதற்கு பேருதவியாக இருக்கின்றன. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில், மேற்படிப்பு, ஆராய்ச்சிக்கல்வி பயில நம்முடைய அரசு உதவித்தொகை தொடர்ந்து வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் என்றென்றும் சிறந்து விளங்கக்கூடியவர்கள் நிச்சயம் அது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் ரூ.4.80 கோடியில் கலைஞர் கலையரங்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.