சிஎஸ்கே-மும்பை இன்று மீண்டும் மோதல்: அடுத்த சுற்று வாய்ப்புக்காக வரிந்துகட்டுகின்றனர்

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. பஞ்சாப் மாநிலம் முல்லான்பூர் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு துவங்கிய 37வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன. இதுபோல் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடேவில் 38வது லீக் போட்டியில் மும்பை-சென்னை அணிகள் மோதுகின்றன. மும்பை அணி 7 போட்டியிலே ஆடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று, 7வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 2ல் மட்டும் வென்று கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. மும்பை அணியில் இன்று பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.

கடந்த போட்டியில் காயமடைந்த கரன் சர்மாவுக்கு பதில் விக்னேஷ் புத்தூரை சேர்க்க வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணி இன்னும் அதன் காம்பினேஷனை முழுமையாக கண்டறியவில்லை என்பதால் இன்றைய போட்டியில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். கடந்த போட்டி போல் இன்றும் ஷேக் ரஷீத் – ரச்சின் ரவீந்திரா ஜோடி தான் ஓபனிங் இறங்கும். நம்பர் 3 இடத்தில் ஆயுஷ் மாத்ரே களம் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே டோனி மற்றும் பயிற்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததால்தான் காயமடைந்த ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக ஆயுஷ் மாத்ரே அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் இன்றைய போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அதேபோல் சிவம் தூபேவுக்கு பின்னர் டிவால்ட் பிரேவிஸ் களமிறக்கப்படலாம். அவர் நேற்று தான் அணியுடன் இணைந்தார் என்றாலும் அவரை உடனடியாக களமிறக்க சிஎஸ்கே முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரேவிஸிற்கு வான்கடே மைதானத்தில் அதிக அனுபவம் இருப்பதாலும், தென்ஆப்பிரிக்கா உள்ளூர் தொடர்களில் நல்ல பார்மில் இருப்பதாலும் அவரை நிச்சயம் இன்றைய போட்டியிலேயே சிஎஸ்கே சேர்க்க்கும் என தகவல்கள் கூறுகின்றன. இன்றைய போட்டியில் ராகுல் திரிப்பாதி, ஜெமி ஓவர்டன் ஆகியோர் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, மும்பை மோதல் என்றாலே அனல் பறக்கும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளுக்கும் இனி ஒவ்வொரு ஆட்டமும் வாழ்வா-சாவா என்பதால் வெற்றிக்காக வரிந்துகட்டுவார்கள் என்பதால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தளிக்கலாம். ஏற்கனவே சேப்பாக்கத்தில் நடந்த தொடக்க போட்டியில் சென்னையுடன் மும்பை தோல்வியடைந்தது. எனவே அந்த தோல்விக்கு பழிதீர்க்க மும்பை தீவிரமாக முயற்சிக்கும்.

The post சிஎஸ்கே-மும்பை இன்று மீண்டும் மோதல்: அடுத்த சுற்று வாய்ப்புக்காக வரிந்துகட்டுகின்றனர் appeared first on Dinakaran.

Related Stories: