14 சிக்சர் விளாசிய இளம்புயல் வைபவ்; அரங்கம் அதிரவே… சாதனை தகர்க்கவே: எமிரேட்சை வீழ்த்தி இந்தியா அபாரம்

துபாய்: ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி 95 பந்துகளில் 171 ரன்கள் விளாசியதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை, இந்தியா 234 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. துபாயில், 19 வயதுக்கு உட்பட்டோர் மோதும் ஆசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ஆயுஷ் மாத்ரே, வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். ஆயுஷ் 4 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஆரோன் ஜார்ஜ் உடன் சேர்ந்து வைபவ் சூர்யவன்ஷி ருத்ர தாண்டவம் ஆடினார். எமிரேட்ஸ் வீரர்களின் பந்துகள், வைபவின் பேட்டில் பட்டு தெறித்து சிக்சர், பவுண்டரிகளாக பறந்தன. 56 பந்துகளில் வைபவ், 100 ரன் விளாசினார்.

இந்த இணை, 2வது விக்கெட்டுக்கு 212 ரன்கள் விளாசிய நிலையில், ஆரோன் 69 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, வைபவ் 171 ரன்னில் (95 பந்து, 14 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டானார். பின் வந்த விஹான் மல்ஹோத்ரா 69, வேதாந்த் திரிவேதி 38 ரன் விளாசினர். 50 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 433 ரன் குவித்தது. அதையடுத்து, 434 ரன் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் எமிரேட்ஸ் களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் யாயின் கிரண் ராய் 17, ஷலோம் டிசூஸா 4 ரன்னில் வீழ்ந்தனர். பின் வந்தோரில் பிருத்வி மது 50 ரன், உத்திஷ் சூரி ஆட்டமிழக்காமல் 78 ரன் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் எமிரேட்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்தது. அதனால், 234 ரன் வித்தியாசத்தில் இளம் இந்தியா மகத்தான வெற்றியை பதிவு செய்தது.

வைபவின் வைபோகம்
* வைபவ் சூர்யவன்ஷி நேற்றைய போட்டியில் 56 பந்துகளில் சதம் அடித்தார்.
* 95 பந்துகளை எதிர்கொண்ட அவர் 14 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் விளாசி, 171 ரன் குவித்தார்.
* 19 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்டில் இது, புதிய உலக சாதனை.
* கடந்த 2008ல், நமீபியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹில் 12 சிக்சர்கள் விளாசியதே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனை, வைபவால் தகர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: