முதல்வர் நிவாரண நிதியில் சிகிச்சை அளிக்காமல் மோசடி; தெலங்கானாவில் 28 மருத்துவமனைகளுக்கு ‘சீல்’: கருப்பு பட்டியலில் வைத்து உத்தரவு

திருமலை: தெலங்கானாவில் முதல்வர் நிவாரண நிதியில் சிகிச்சை அளிக்காமல், கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்ட 28 மருத்துவமனைகளுக்கு சீல் வைத்து, அம்மாநில அரசு கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. தெலங்கானாவில் முந்தைய ஆட்சியின்போது, முதல்வர் நிவாரணநிதி திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், சிகிச்சை அளித்ததாக கூறி போலி பில் பயன்படுத்தி முதல்வர் நிவாரண நிதியை கோடிக்கணக்கில் கொள்ளையடித்ததாக கடந்த ஆண்டு ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டன. இதன்பேரில் விரிவான விசாரணை நடத்த முதல்வர் ரேவந்த்ரெட்டி சிஐடிக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து தீவிரமாக நடத்திய விசாரணையில், மாநிலம் முழுவதும் 28 தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அந்த மருத்துவமனைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்பேரில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கம்மம் மாவட்டத்தில் 10 தனியார் மருத்துவமனைகள், ரங்காரெட்டி மாவட்டத்தில் 6 தனியார் மருத்துவமனைகள், ஐதராபாத்தில் 4, நல்கொண்டாவில் 3, மகபூபாபாத்தில் 2 மற்றும் கரீம்நகர், பெத்தப்பள்ளி, ஹனுமகொண்டா மாவட்டங்களில் தலா 1 மருத்துவமனை என மொத்தம் 28 மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த மருத்துவமனைகளின் உரிமையாளர்கள் மீது ​​குற்றவியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த மருத்துவமனைகள் மீது கருப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி 28 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முதல்வர் நிவாரண நிதியில் சிகிச்சை அளிக்காமல் மோசடி; தெலங்கானாவில் 28 மருத்துவமனைகளுக்கு ‘சீல்’: கருப்பு பட்டியலில் வைத்து உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: