சென்னை: கல்குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சமீபத்தில் விதிக்கப்பட்ட சிறு கனிம நிலவரி மற்றும் ராயல்டி உயர்வு உள்ளிட 24 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2024க்கு முன் வெட்டி எடுக்கும் கனிமங்களுக்கு, கனமீட்டருக்கு 56 ரூபாய் ராயல்டி தொகை இருந்தது. 2024ம் ஆண்டில் ராயல்டி தொகை 90 ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த ஏப்ரல் முதல் சிறு கனிம நிலவரி என்ற புதிய வரியை தமிழக அரசு விதித்தது. மேலும் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களுக்கு மீட்டர் என்ற அளவில் விதிக்கப்பட்ட ராயல்ட்டியை தற்போது டன் என்று அளவுக்கு மாற்றபட்டது.
இதனால் 90 ஆக இருந்த ராயல்டி தொகை தற்போது 165 ஆக செலுத்த வேண்டி உள்ளது. இதன் காரணமாக ஒரு யூனிட் ஜல்லியின் விலை 1500 ரூபாய் வரை உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. எனவே கல்குவாரியில் வெட்டி எடுக்கும் கனிமங்களை கன மீட்டர் அளவில் கணக்கிட வேண்டும். டன் அளவில் கணக்கீடு செய்து ராயல்டி பெறக் கூடாது. மேலும் புதிதாக விதித்த சிறு கனிம நிலவரி விதிப்பை கைவிட வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல் குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி அளித்த பேட்டி: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கனிமவள அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை மிக சுமுகமாக நடந்தது. எங்களுடைய பழைய கோரிக்கைள், 2023ம் ஆண்டில் தெரிவித்த 23 அம்ச கோரிக்கைள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2, 3 வருடங்களாக தீவிரமாக அலசி, ஆராய்ந்து அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்கள். இந்த காலக்கட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வதற்கு மூலக்காரணமாக இருந்த 3 காரணங்கள், மூன்று வரிகள் விலையேற்றம் தொடர்பாக வருகிற திங்கட்கிழமை பேசிக்கொள்ளலாம் என்று அமைச்சர் சொல்லியிருக்கிறார்.
முதல்வருடன் கலந்துபேசி திங்கட்கிழமை நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. பல்லாயிரம் கோடியில் மக்களுக்கு இலவசமாக கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல எங்களுக்கும் சலுகை கொடுத்து எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றி தருவார்கள் என்று நம்புகிறோம். இன்னும் வேலை நிறுத்தம் தொடர்கிறது. மீண்டும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல் குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை: சுமுகமாக நடந்ததாக சங்க தலைவர் பேட்டி appeared first on Dinakaran.