புதுடெல்லி: வங்கதேசத்தில் இந்து சிறுபான்மை தலைவர் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதன் பின் இந்தியா -வங்கதேசம் இடையிலான உறவில் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசானது நாட்டில் சிறுபான்மையினர், குறிப்பாக இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறி வருகின்றது. இதன் காரணமாகவே இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு: வங்கதேசத்தின் தினாஜ்பூரைச் சேர்ந்தவர் பாபேஷ் சந்திரா ராய். வயது 58. அங்குள்ள பிரால் உபாசிலாவில் முக்கிய இந்து தலைவராக இருந்தார். அந்த அமைப்பின் துணைத்தலைவராகவும் செயல்பட்டார். இந்து சமூக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார். கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டில் இருந்த போது மாலை 4.30 மணிக்கு அவருக்கு ெதாலைபேசி அழைப்பு வந்தது. அதை தொடர்ந்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து பைக்கில் வந்த 4 பேர் அவரை கடத்திச்சென்றனர். அங்குள்ள நராபரி கிராமத்திற்கு அவர் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவரது மனைவி சாந்தனராய் போலீசில் புகார் அளித்தார். இந்த சூழலில் அன்று மாலையில் கடத்திச்சென்றவர்கள் பாபேஷ் சந்திராராயை வேனில் அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
அவர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை அருகில் உள்ள சுகாதார வளாகத்தில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக தினாஜ்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் பாபேஷ் சந்திரா ராய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக அவரது மனைவி சாந்தனா ராய் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாபேஷ் சந்திரா ராய் கொலை தொடர்பாக ஒன்றிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஊடக பதிவில், ‘‘வங்கதேசத்தில் இந்து சிறுபான்மை தலைவரான பாபேஷ் சந்திரராயின் கடத்தல் மற்றும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதை நாங்கள் துயரத்துடன் கவனித்துள்ளோம்.
இந்த சம்பவத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசு நிறைவேற்ற வேண்டும் ’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post வங்கதேசத்தில் மீண்டும் அட்டூழியம்: இந்து தலைவர் கடத்திக் கொலை; இந்தியா கடும் கண்டனம் appeared first on Dinakaran.