அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ள வில்லை: குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்

ஆர்.எஸ்.மங்கலம்,ஏப்.18: திருப்பாலைக்குடியில் குடிநீருக்காக அதிமுக ஆட்சியில் ரூ.50 லட்சம் செலவு செய்தும் பயன் இல்லாமல் போய் விட்டது. தற்போதைய மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் கிழக்கு கடற்கரை சாலை அருகில் அமைந்துள்ள கடலோர கிராமம் திருப்பாலைக்குடி. இது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி திருப்பாலைக்குடி ஊராட்சியாகும். இங்கு 3000க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் முக்கிய பிரதான தொழில் என்றால், மீன்பிடி தொழில் ஆகும். இந்த ஊராட்சி கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால் நிலத்தடி நீர் உப்பாக உள்ளது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவைக்கு, கிணறு மற்றும் போர்வெல் போட்டு அதில் கிடைக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலையே தொடர்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் சார்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் திருப்பாலைக்குடி கிழக்கு கடற்கரை பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆர்.ஒ பிளான்ட் ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையின் மேல்புறத்தில் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவில் சுமார் 1200 அடி ஆழத்தில் போர்வெல் கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டது. இரண்டு திட்டத்திற்கும் மக்களின் வரிப்பணத்தில் சுமார் அரை கோடி ரூபாய் வரையிலும் செலவு செய்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டத்தின் மூலம் 1 குடம் தண்ணீர் கூட கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மீனவர்கள் என்பதால், மீன்பிடி கடல் தொழில் செல்வதற்காகவே கடலுக்குள் சென்று மீன் பிடித்து விட்டு கரை திரும்புகின்றனர். இவர்கள் கடல் தண்ணீரில் இரவு பகலாக தொழில் செய்வதால் குளிக்க மற்றும் குடிக்க அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது.

இவர்களின் தேவைக்கு கடல் தண்ணீரை பயன்படுத்த முடியாது. நிலத்தடி நீரும் உப்பாக இருப்பதாலும், வீடுகளில் உள்ள பொதுமக்களின் தேவைக்கான குடி தண்ணீர் மற்றும் குளிக்க மற்ற இதர தேவைகள் அனைத்திற்குமே லாரி, டிராக்டர் உள்ளிட்டவற்றின் மூலம் வரும் டேங்கர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் கடற்தொழிலில் கிடைக்க கூடிய வருமானத்தில் பெரும் பகுதியை விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதற்கே சரியாகி விடுகிறது. தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் வருமானமும் மிகவும் குறைவு. வரும் வருமானத்தில் பெரும் பகுதியை தண்ணீருக்கு செலவு செய்ய வேண்டி இருப்பதனால், இதர குடும்ப செலவுகளுக்கு மிகவும் கஷ்டம் படும் நிலை வந்து விடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் சரிவர இங்கு வரவில்லை.

இதனை முந்தைய அதிமுக ஆட்சியில் சரியாக கண்டு கொள்ளப்படாததே இந்த கூடுதலான தண்ணீர் பிரச்னைக்கு காரணமாகும். இதற்கு தற்போதைய திமுக அரசு இப்பகுதியில் நிலவும் குடிதண்ணீர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு கண்டு, சீரான குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பாலைக்குடி ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியின் குடிநீர் பிரச்னைக்கு எப்போது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை. கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எங்களின் குடிதண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. தீர்வு காண்பதாக கூறி பயனற்ற திட்டம் தீட்டி பல லட்சம் ரூபாயை செலவு செய்து பணம் தான் வீணாகி விட்டது. நாங்கள் தினமும் எங்களின் தேவைக்கு குடிதண்ணீர் ஒரு குடம் சுமார் ரூ 10 முதல் 15 வரையிலும், 20 லிட்டர் அளவுள்ள 1 கேன் தண்ணீர் ரூ.40ம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாள் ஒன்றுக்கு ரூ.300க்கு மேல் செலவாகி விடுகிறது. பெரிய குடும்பமாக இருந்தால் ரூ.500க்கு மேல் செலவாகி விடுகிறது.

The post அதிமுக ஆட்சியில் கண்டு கொள்ள வில்லை: குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: