கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி தர்ணா

திருப்பூர், ஏப்.18: தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் திருப்பூர் அரிசிக்கடை வீதியில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். இதில், பல தலைமுறைகளாக கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அறநிலையத்துறை சட்டப்பிரிவு 34ன் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை தீர்மானித்தும் கிரய பட்டா வழங்க வேண்டும். அடிமனை நீங்களாக பயனாளிகள் கட்டிய மேல் கட்டுமானங்களை சட்டப்படி வாங்கவும், விற்கவும், பதிவு செய்யவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வக்போர்டு இடங்களில் குடியிருப்பவர்கள், சாகுபடி செய்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்.

பயனாளிகள், குடியிருப்பு வாசிகள் வழிவகையால் கிரயம் பெற்று அனுபவித்து வரும் நிலங்களை பூஜ்யம் மதிப்பு செய்து பத்திர பதிவிற்கு தடையினை ஏற்படுத்தி வரும் அறநிலையத்துறை, வக்போர்டு நடவடிக்கைகளை திரும்பப்பெற்று, வழக்கமான பத்திரப்பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கோயில் இடங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: