பல்கலைக்கழகங்களின் உரிமை மீட்டெடுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: பல்கலைக் கழகங்களின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் நடத்திய தமிழக முதல்வருக்கு மே மாதம் பாராட்டு விழா நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார். தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவற்றில் துணை வேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் காரணமாக அந்த பணிகள் முடக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரே பதவி வகிப்பதற்கான மசோதாவை பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்த விவகாரத்தில் உச்சமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரே இருப்பார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நேற்றுமுன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னின்று நடத்தினார். பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உத்தரவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், அனைத்து பல்கலைக் கழக பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று சென்னையில் தொடங்கியது.

இந்த பயிற்சிப் பட்டறையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழ்நாட்டின் உயர் கல்விச் சூழலை மேம்படுத்துவதில், அரசு பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாநில அரசுப் பல்கலைக்கழகங்களின் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளின் முதன்மை பொறுப்பாளர்களாக திகழும் பதிவாளர்களுக்கும், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் தற்போது 65 உயர் அலுவலர்கள் பங்கேற்று உள்ளனர்.

மேலும், சட்டப் போராட்டத்தை நடத்தி பல்கலைக்கழக உரிமையை மீட்டுத் தந்த நமது முதல்வருக்கு கல்லூரி முதல்வர்கள், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பினர், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த கல்வியாளர்கள் சார்பாக வரும் மே 3ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மாபெரும் பாராட்டு விழா நடத்திட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதன்படி மே 3ம் தேதி பாராட்டு விழா நடக்கும். இவ்வாறு அமைச்சர் பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பல்கலைக்கழகங்களின் உரிமை மீட்டெடுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: