அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதோடு சரியானவர்களின் கரங்களில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதோடு, அது சரியானவர்களின் கரங்களில் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்த அம்பேத்கர் 135வது பிறந்த நாள் விழா, அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட 75வது ஆண்டு விழா, எழும்பூர் நீதிமன்றத்தின் 110வது ஆண்டு விழா என ஒருங்கிணைந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: அம்பேத்கர் என்றால், அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமான தலைவர் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், இட ஒதுக்கீடு, சமூகநீதி கிடைக்கிறது என்றால், அதற்கான கதவுகளை, அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் திறந்து வைத்தவர். முதல்வர் தமிழ்நாட்டினுடைய உரிமைகளை காப்பாற்ற நிலைநாட்டிட சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார். நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற மாணவர்களுடைய, பெற்றோர்களுடைய கோரிக்கை எண்ணத்தை நிறைவேற்ற, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தான் சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு இன்றைக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில், மீண்டும் நம்முடைய சட்டப்போராட்டத்தை சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக தொடர்ந்து போராடிக் கொண்டிருகின்றோம். அதுமட்டுமல்ல, மருத்துவப்படிப்பில் அகில இந்திய கோட்டா இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சட்டப்போராட்டம் நடத்தி உறுதி செய்தது நம்முடைய அரசு. இப்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவும் அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.

அண்மையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்தத்துக்கு எதிராகவும், அரசும், கழகமும் வழக்குகளை தொடர்ந்திருக்கிறது. இன்றைக்கு இந்த வழக்கில் ஒரு நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. நீதித்துறையை பொறுத்தவரை தமிழ்நாட்டுக்கென்று தொடர்ந்து இரண்டு கோரிக்கைகள் இருக்கின்றன. ஒன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். இன்னொன்று, உச்ச நீதிமன்ற கிளையை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்பது. இதற்காக முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நேரத்தில் ஒரு கருத்தை நிறைவாக சொல்ல விரும்புகிறேன். அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றி ஆற்றிய உரையை இங்கே குறிப்பிட்டு காட்ட விரும்புகின்றேன்.

அதாவது அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவோர் கெட்டவர்களாக இருந்துவிட்டால், அரசியலமைப்புச் சட்டமும் கெட்டதாகிவிடும். அதேமாதிரி, ஒரு அரசியலமைப்புச் சட்டம் எவ்வளவு கெட்டதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவோர் நல்லவர்களாக இருந்தால், அந்த அரசியலமைப்புச் சட்டமும் நல்லதாக மாறிவிடும் என்று சொன்னார் சட்டமேதை அம்பேத்கர். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதோடு, அது சரியான நபர்களுடைய கரங்களில் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை நாம் பாதுகாத்தால், அந்த அரசியலமைப்புச் சட்டம் நம்மை பாதுகாக்கும், நம்முடைய நாட்டையும் பாதுகாக்கும். இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதோடு சரியானவர்களின் கரங்களில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: