திருச்செந்தூரில் இருந்து பழநிக்கு செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

*பொங்கல் பண்டிகை, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருச்செந்தூர் : பொங்கல் மற்றும் தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக திருச்செந்தூர் – பழநி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்கின்றனர்.

இதற்காகவே ரயில் நிலையமும், பகத்சிங் பஸ் நிலையமும் சுமார் 500 மீட்டர் இடைவெளியில் அருகருகே உள்ளது. திருச்செந்தூரில் இருந்து நெல்லை மார்க்கமாக மட்டுமே ரயில் வழித்தடம் உள்ளது. திருச்செந்தூரில் இருந்து தினமும் நெல்லைக்கு காலை 7.10 மணி, 10.10 மணி, பிற்பகல் 2.50 மணி, மாலை 6.15 மணி ஆகிய நேரங்களில் பயணிகள் ரயிலும், பகல் 12.20 மணிக்கு பழநி வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும், இரவு 8.25 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படுகிறது.

சென்னை மற்றும் நெல்லையில் இருந்து மறுமார்க்கமாகவும் திருச்செந்தூருக்கு ரயில்கள் தினசரி வருகின்றது. இதனால் காலை முதல் இரவு வரை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டார விவசாயிகள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களின் பயணத் தேவையின் அங்கமாகவே ரயில்கள் உள்ளது.

இதன் காரணமாகவே திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.17.5 கோடி மதிப்பில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கமாக நடைமேடை விரிவாக்கம், வாகன நிறுத்தம், பயணிகள் ஓய்வறை, மற்றும் காத்திருக்கும் அறை போன்ற பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இவையெல்லாம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை மாற்றிட உள்ளன. ஆனால் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்வதற்கு முன்னரே தினசரி ரயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பயணிகளும் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் வார விடுமுறை நாட்களிலும் ரயில்கள் பக்தர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது. தற்போது பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது. எனவே தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே திருச்செந்தூருக்கு வார விடுமுறை நாட்களில் சிறப்பு ரயிலும், தினமும் இயக்கப்படும் ரயில்களில் கூடுதலான பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. அவ்வாறு செய்தால் பக்தர்கள் நெருக்கடியின்றி திருச்செந்தூர் வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

குறிப்பாக தைப்பொங்கலையொட்டி ஜனவரி மாதம் தொடங்கியது முதல் மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வருவது வழக்கமாகும். அதேபோல தைப்பூசத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பழநி மற்றும் திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள்.

பாதயாத்திரை வரும் பக்தர்கள் வழிபாடு முடிந்து பெரும்பாலும் தங்கள் ஊருக்கு புறப்படும் போது ஓய்வு தேவைப்படுவதால் ரயில் பயணத்தையே விரும்புவர். ஏராளமான பக்தர்களின் பழநி – திருச்செந்தூர் தல வழிபாட்டுக்கு பாலக்காடு ரயில் சேவையே நேரடியாக வழிவகுக்கிறது.

மற்றபடி பழநி செல்ல வேண்டும் என்றால் நெல்லை, மதுரை வந்து அங்கிருந்து இணைப்பு ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே ஏற்கனவே அதிக பயணிகள் வந்து செல்லும் திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பழநி செல்லும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலான பெட்டிகளை இணைக்க வேண்டும். அதேபோல் 2016 பிப்.1ம் தேதி நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முதல் நடைமேடையில் நிறுத்த கோரிக்கை

திருச்செந்தூரில் இருந்து பழநி வழியாக செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் 2வது நடைமேடையில் நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள் படிக்கட்டுகள் வழியாகவோ அல்லது மின் தூக்கி வழியாக ஏறி 2வது நடைமேடைக்கு செல்வது வழக்கமாகும்.

இந்த ரயிலில் பெரும்பாலும் முருக பக்தர்களே குடும்பத்துடன் பயணிக்கின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பழநி ரயிலில் பயணத்தை திட்டமிட்டு வரும் பக்தர்கள், கோயிலில் கூட்டமான நேரத்தில் தரிசனம் முடிந்து வேக வேகமாக ரயில் நிலையத்துக்கு வரும்போது நேரம் பகல் 12 மணியை நெருங்கி விடுகிறது.

இதனால் இன்னும் 20 நிமிடமே உள்ளதால் வரிசையில் நின்று டிக்கெட் எடுத்துவிட்டு படிக்கட்டுகளை தாண்டி சென்றால் தாமதமாகி விடுமோ? என பதற்றத்துடன் அந்த நேரத்தில் முதல் நடைமேடைக்கு ரயில் வந்து விடும் என்று தெரிந்தும் வேகமாக தண்டவாளத்தில் இறங்கியும், முதல் நடைமேடையில் ரயில் வந்து விட்டால் அதில் ஏறி மறு பக்கம் இறங்கி பதைபதைப்புடன் பாலக்காடு ரயிலில் ஏறுகின்றனர்.

இதனால் ஒரு சில நேரத்தில் பக்தர்கள் பெரும் அவதியடைகின்றனர். எனவே பல மைல் தூரத்தில் இருந்து திருச்செந்தூர் வந்து திரும்பும் பக்தர்கள் வசதிக்காக 12.20 மணிக்கு புறப்படும் பாலக்காடு ரயிலை முதல் நடைமேடையிலும், 2.50 மணிக்கு புறப்படும் நெல்லை பயணிகள் ரயிலை 2வது நடைமேடையில் நிறுத்தினால் உதவியாக இருக்கும் என்ற கோரிக்கையும் பயணிகள் மற்றும் பக்தர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: