விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவண்ணாமலை : விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடியாக உள்ளது என்று திருவண்ணாமலையில் வேளாண் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் சிறப்புரையாற்றினார்.

மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; “உழவர்கள் பின்னால்தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் இந்நிகழ்ச்சி உள்ளது. விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடியாக உள்ளது.

நாற்று நட்டு அறுவடை செய்கிற வரை விவசாயிக்கு இருப்பது பிரசவ வேதனை என்று சொல்வார்கள். விவசாயிகள் தேடி அலையக்கூடாது என்பதற்காகத்தான் உங்களை தேடி வேளாண் கண்காட்சி அமைத்துள்ளோம். நமது வேளாண்மையை உலகத் தரத்துக்கு உயர்த்த பணியாற்றி வருகிறோம்.

இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது, பல மணி நேர வேலைகளை சில மணி நேரத்தில் செய்யலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளது, அந்த வளர்ச்சி விவசாயிகளுக்கு வந்து சேர்ந்தால்தான் உண்மையான வளர்ச்சியாக மாறும்.

விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளலாம். 13 தலைப்புகளில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளுக்கனா கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் வணிக வாய்ப்புகளை கண்காட்சியில் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 5 ஆண்டுகளாக மேட்டூர் அணையை சரியாக நீர் திறக்கிறோம். பாரம்பரிய வேளாண் சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து ரூ.350 கோடியில் திட்டம் செயல்படுத்தியுள்ளோம். முந்தைய ஆட்சியாளர்கள் கைவிட்ட 125 உழவர் சந்தைகளை புனரமைத்துள்ளோம். 5 ஆண்டுகளில் புதிதாக 1.82 லட்சம் புதிய விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 32.81 லட்சம் ஏக்கரில் சேதமான பயிர்களுக்காக 20 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1631 கோடி நிவாரணம் வழங்கியுள்ளோம்.

பெரணமல்லூரில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்படும். இவ்வாண்டு கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை பாதிக்கின்ற சட்டத்தை சிலர் ஆதரிப்பார்கள். விவசாயிகள் போராட்டத்தை சிலர் கொச்சைப்படுத்துவர். விவசாயிகள் வேடம் போட்டு சிலர் அரசியல் செய்கின்றனர்” என கூறினார்.

Related Stories: