நியூசி., ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்கள் நீக்கம்


மும்பை: இந்தியாவுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடிது. இதில், 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை வென்றது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் நியூசிலாந்து டெஸ்ட் தொடரை வென்றது. அதே நேரத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது. 10 வருடங்களுக்கு பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றங்கள் நிகழலாம் என்று தகவல்கள் வெளியானது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது. சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி வென்றதால் எந்த மாற்றங்களும் நிகழவில்லை. இந்நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மோசமாக இழந்ததால், இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் மற்றும் வலிமை மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள கவுதம் கம்பீருக்கு துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட அபிஷேக் நாயர் ஒப்பந்த காலம் முடியாத நிலையில் 8 மாதங்களில் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் பீல்டிங் பயிற்சியாளர்கள் டி.திலீப் மற்றும் சோஹம் தேசாய் இருவரும் 3 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் நீடிப்பதால் அவர்களும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் ஒப்பந்த காலமும் முடியவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அபிஷேக் நாயர் பலிகடாவா?
நியூசி., ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் குழுவில் உள்ள சக்தி வாய்ந்த நபருக்கும், மூத்த நட்சத்திர வீரருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் அபிஷேக் நாயர் பலிகடாவாக்கப்பட்டு நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

The post நியூசி., ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி: இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர்கள் நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: