மீன்பிடி தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும்: மீன்வளத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; புதுச்சேரி அரசு, சார்பு செயலர் 10.04.2025 தேதியிட்ட அறிவிப்புப்படி கடல்சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தும் வகையில் பாதுகாத்திட 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் முதல் ஜூன் மாதம் 14-ஆம் நாள் வரையிலான கால அளவில் 61 நாட்கள் (இரு நாட்களும் உட்பட) புதுச்சேரி பிரதேச கிழக்கு கடல் நெடுகில், கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் புதுகுப்பம் மீனவ கிராமம் வரையில் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகின்றது.

மேலும் இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன்பிடிப்பதும் தடை செய்யப்பட்டது தாங்கள் அறிந்ததே. தற்பொழுது குறிப்பிட்ட ஒரு மீனவ கிராமத்திலிருந்து பைபர் படகில் கடலில் மீன்பிடி தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இத்துறைக்கு புகார்கள் வருகிறது. இதன் காரணமாக, மற்ற கிராம மீன்வளிடையே பதற்றம் நிலவுகின்ற சூழல் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. எனவே, அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார் / மக்கள் குழு / கோவில் நிர்வாக குழுவைச் சேர்ந்தவர்கள்.

புதுச்சேரி அரசால் வெளியிடப்பட்டுள்ள மீன்பிடி தடைகால ஆணையை தவறாது பின்பற்றி தங்களது கிராமத்தை சேர்ந்த இயந்திரம் பொருத்திய பைபர் படகில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தெரியப்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த எச்சரிக்கையை மீறி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு புதுச்சேரி அரசு மீன்வளத்துறையால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிவாரணம் நிறுத்தப்படுவதற்கு அவர்களே காரணமாவார்கள் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடத்தக்கது.

The post மீன்பிடி தடைக்காலத்தில் விதிகளை மீறி மீன் பிடித்தால், மீனவர்களுக்கான நிவாரணம் நிறுத்தப்படும்: மீன்வளத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: