விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் லாரஸ் உலக விளையாட்டு விருதுக்கு ஆண்டின் சிறந்த அணி’ பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட உலகின் முதல் மகளிர் கிரிக்கெட் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தியது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கான 339 ரன்களை வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்து சாதனை படைத்தது.

இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையைத் தன்வசப்படுத்தியது. இந்த அசாத்தியமான போராட்டக் குணத்தையே லாரஸ் அமைப்பு தனது செய்திக்குறிப்பில் பாராட்டியுள்ளது.

இந்த விருதுக்கான போட்டியில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணி, ஐரோப்பிய ரைடர் கோப்பை அணி, பிரான்ஸின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப் மற்றும் மெக்லாரன் ஃபார்முலா 1 அணி போன்ற உலகின் முன்னணி ஜாம்பவான் அணிகளுடன் மோத உள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்கனவே வினேஷ் போகத், நீரஜ் சோப்ரா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தனிநபர் பிரிவில் லாரஸ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு குழுவாக இந்திய மகளிர் அணி இந்தப் பட்டியலில் இணைந்து தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

Related Stories: