சென்னை: சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 38 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய திட்டம் தான் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை’. அதன்படி, மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள் ஆகியோருக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 13ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைத்து அதிரடி காட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது உரிமைத் தொகை தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை முன்கூட்டியே வழங்கப்படுவதுடன் கோடைகால தேவைகளுக்காக சிறப்பு உதவி தொகை ரூ.2 ஆயிரம் கூடுதலாக அரசு தரப்பில் வரவு வைக்கப்பட்டது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த முதல்வர் ‘‘பெண்களின் பொருளாதார சுதந்திரமே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம். எத்தனையோ தடைகள் வந்தாலும், சொன்னதைச் செய்தே தீருவேன். அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால், இந்தத் தொகை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும்’’ என வாக்குறுதியும் அளித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு குடும்பத்தலைவிகள் நெகிழ்ச்சியுடன் நன்றியை முதல்வருக்கு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் அடுத்த அதிரடியாக நேற்று காலை விளிம்பு நிலையில் இருக்கும் முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகள் என 38 லட்சம் பேரின் வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வழங்கியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம்.
நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக ரு.2 ஆயிரம் மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம். இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.3200 ரூபாயும், 5 லட்சத்து 92 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 லட்சத்து 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரமும் வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி, மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடி தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. இந்த தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் – தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
