மரக்காணம் அருகே பயங்கரம் மாந்தோப்பில் இளம்பெண் அடித்து கொலை

மரக்காணம், ஏப். 17: மரக்காணம் அருகே மாந்தோப்பில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுசம்பந்தமாக 3 குழந்தைகளுடன் மாயமான அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே தாழங்காடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. இந்த மாந்தோப்பில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாள் (35) என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கடந்த வாரம் வந்து தங்கி உள்ளார். பெருமாளின் சொந்த ஊர் உள்ளிட்ட மற்ற விபரம் யாருக்கும் தெரியாத நிலையில் அடர்ந்த மாந்தோப்பில் குடும்பத்துடன் தங்கி பக்கிங்காம் கால்வாயில் நண்டு, மீன்களை பிடித்து தம்பதியர் விற்பனை செய்து வந்துள்ளனர்.

நேற்று மதியம் வழக்கம்போல் மாந்தோப்பை பராமரிக்கும் தாழங்காடு கிராமத்தைச் சேர்ந்த மதி என்பவர் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெருமாளின் மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மதி உடனடியாக மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், மரக்காணம் வருவாய் ஆய்வாளர் வனமயில் மற்றும் போலீசார் தலை மற்றும் முகத்தில் ரத்தக் காயங்களுடன் கிடந்த பெருமாள் மனைவியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு அவரது கணவர் மற்றும் குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில் சந்தேகமடைந்த போலீசார் மதி உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு அருகில் மதுபாட்டில்கள் கிடந்த நிலையில் அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இறந்த பெண்ணின் பெயர், சொந்த ஊர், உறவினர்கள் முழு விபரம் தெரியாத நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார், கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில், பக்கிங்காம் கால்வாயில் நண்டு, மீன் பிடிக்க தங்கியிருந்த தம்பதியிடையே குடிபோதையில் திடீரென தகராறு ஏற்பட்டு இருக்கலாம், இதில் ஆத்திரமடைந்த பெருமாள் அருகில் கிடந்த கட்டையால் மனைவியை சரமாரி அடித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இல்லாவிடில் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர். இதனால் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கணவர் சிக்கினால் மட்டுமே முழு உண்மை தெரியவரும் என்பதால் அருகிலுள்ள மாமல்லபுரம், கல்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை அவரை தேடி வருகிறது. மாந்தோப்பில் இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மரக்காணம் அருகே பயங்கரம் மாந்தோப்பில் இளம்பெண் அடித்து கொலை appeared first on Dinakaran.

Related Stories: