செல்போனை பிடுங்கி விளையாடியதால் தகராறு இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, ஏப். 17: செல்போனை பிடுங்கி விளையாடியபோது ஏற்பட்ட பகையால் இளைஞர்களை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த தினேஷ் (24), அதே பகுதியில் உள்ள குமார் என்பவரின் தாயாரின் 16ம் நாள் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வசந்தகுமார் என்பவரின் செல்போனை பிடுங்கி தினேஷ் விளையாடி உள்ளார். இதை தொடர்ந்து செல்போனை தினேஷிடம் இருந்து பிடுங்கி அருண் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொடுத்துள்ளனர். அப்போது தினேஷ் மற்றும் அருண்குமார், சதீஷ்குமார் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2022 ஏப்ரல் மாதம் 30ம் தேதி இரவு சதீஷ் குமார் மற்றும் அருண்குமார் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு சென்று தினேஷ் கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மருத்துவர்கள் அருண்குமார், சதீஷ்குமார் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தினேஷ் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை 17வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தோத்தி ராமையா முன்பு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜே.சரவணன் ஆஜராகி, தினேசுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார். தினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்து வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சிகளுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் தினேசுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

The post செல்போனை பிடுங்கி விளையாடியதால் தகராறு இரட்டை கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: