சென்னை: செய்தித் துறை சார்பாக 12 புதிய அறிவிப்புகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிட்டார். அதன்விவரம்:
* குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
* இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.
* பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்துக்களால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் அழைக்கப்பட்டார். அவர் “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு, 1969இல் சாகித்திய அகாடமியின் விருது பெற்றவர். அவரது இலக்கியப் பணிகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் விதமாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.
* ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட வேலூர் அண்ணா கலையரங்கத்தினைக் குளிர்சாதன வசதி, வாகன நிறுத்தம், புதிய கழிப்பறைகள், ஜெனரேட்டர் வசதி, நவீன எல்.இ.டி. மின் விளக்குகள், ஒலி அமைப்புகள் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* குமரிக் கோமேதகம் பொன்னப்ப நாடார் நூற்றாண்டினையொட்டி நாகர்கோவிலில் ரூ.50 லட்சம் செலவில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.
* தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் சென்னையில் இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
* மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் ரூபாய் 3.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்கள் ரூபாய் 2.50 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு அம்மண்டபங்களில் உள்ள புகைப்படங்களை எண்மயமாக்கப்படும்.
* அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் 10 மாவட்டங்களில் மின்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 28 மாவட்டங்களிலும் மின்சுவர்கள் ரூபாய் 17.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களுக்கேற்ப, 6 பாடப் பிரிவுகளுக்கு முதற்கட்டமாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.
* அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்தியாளர்கள் உடனுக்குடன் செய்திகளை விரைந்து அனுப்பிட ஏதுவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள செய்தியாளர் அறைகளில், நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள், ரூபாய் 41 லட்சம் (தொடரும் மற்றும் தொடரா செலவினம்) மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
The post அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.18 கோடியில் மின்சுவர்கள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு appeared first on Dinakaran.
