ஈரோட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் காணாமல் போன5 மாணவிகள்: திருச்சியில் மீட்ட போலீஸ்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவிகள் 5 பேர் நேற்று பள்ளிக்கு சென்று தங்களது இறுதி பொதுத்தேர்வை எழுதி விட்டு வீட்டுக்கு செல்லாமல் மயமாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்த போது அங்கு மதியம் தேர்வு முடிந்ததும் அனைத்து மாணவிகளும் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில், நேற்று இரவு பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பவானி போலீசார் விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் செல்போன் உள்ளதா? கடைசியாக அவர்களது செல்போனில் இருந்து யாருக்கு பேசப்பட்டது? போன்ற விவரங்களையும் போலீசார் பெற்றோர்களிடம் இருந்து கேட்டறிந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்வையிட்டு மாயமான மாணவிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுட்டனர். இதையடுத்து 5 மாணவிகளில் ஒருவர் மட்டும் செல்போன் எடுத்து சென்றது தெரியவந்தது. அவரது செல்போன் நம்பரை டிரேஸ் செய்தபோது அவர்கள் திருச்சியில் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து திருச்சி விரைந்த போலீசார் மாயமான 5 மாணவிகளை மீட்டனர். தேர்வு எழுதிவிட்டு மாணவிகள் 5 பேரும் திருச்சி உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்ட 5 மாணவிகளும் பவானி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடன் விசாரணை நடைபெற்றது. தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று சாமி தரிசனம் செய்ய பெற்றோருக்கு தகவல் கொடுக்காமல் மாணவிகள் 5 பேரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், மாணவிகள் 5 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஈரோட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் காணாமல் போன5 மாணவிகள்: திருச்சியில் மீட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Related Stories: