நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தாமரைக்குட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். இவர் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் அதிகளவிலான எடை தூக்கி இந்தியாவின் இரும்பு மனிதன் என்ற பட்டத்தை பெற்றவர். சுமார் 13 டன் எடை கொண்ட லாரியை இழுத்தல், ஜேசிபியை இழுத்தல் என்ற பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தண்டால் செய்து, அதை ரீல்ஸ் ஆக சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ காட்சிகள் வைரலானது. ரயில்வே சட்டம், 1989, பிரிவு 147 இன் கீழ், தண்டவாளங்களில் அத்துமீறி நுழைவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதையடுத்து, தான் நடத்தி வரும் ஜிம்மில் இருந்த கண்ணனை நேற்று காலை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
அப்போது போலீசாரிடம் கண்ணன் கூறுகையில், உடற்பயிற்சி அவசியம் என்பதை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தான் உடற்பயிற்சி செய்து, அதை வீடியோவாக வெளியிட்டேன். ரயில்வே விதிமுறைகளை முழுமையாக நான் அறிந்திருக்கவில்லை’ என கூறி உள்ளார். இதையடுத்து கண்ணன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கண்ணனுடன் தண்டால் எடுத்த மற்றொரு நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
The post ரீல்ஸ் மோகத்துக்கு அளவே இல்லாம போச்சு…தண்டவாளத்தில் தண்டால்; இரும்பு மனிதன் கைது appeared first on Dinakaran.