வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் மேற்கு வங்கத்தில் 150 பேர் கைது: கலவரத்தில் பாதிக்கப்பட்ட 400 பேர் ஆற்றை கடந்து அண்டை மாவட்டத்தில் தஞ்சம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தையடுத்து முர்ஷிதாபாத்தை சேர்ந்த 400 பேர் ஆற்றை கடந்து அண்டை மாவட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாட்டின் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் பயங்கர வன்முறைகள் ஏற்பட்டது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல இடங்களில் நடந்த வன்முறைகளில் தந்தை மகன் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இரு தரப்பு மோதலில் ஒரு வாலிபர் பலியானார். ஏராளமான வாகனங்கள், கடைகள் மற்றும் பல்வேறு சொத்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. வன்முறைகள் கட்டுக்கடங்காமல் போனதால் முர்ஷிதாபாத்துக்கு மத்திய பாதுகாப்பு படைகளை அனுப்ப கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பிஎஸ்எப் படையை சேர்ந்த 5 கம்பெனி வீரர்கள் முர்ஷிதாபாத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முர்ஷிதாபாத் வன்முறை நேற்று12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சிறுபான்மையினர் அதிகம் உள்ள சுதி,துலியான்,ஜங்கிப்பூர்,ஷம்ஷேர்கஞ்ச் பகுதிகளில் போராட்டத்தின் போது தீ வைக்கப்பட்டதில் சேதமடைந்த கடைகள்,வீடுகள்,ஓட்டல்கள் தொடர்பான புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு விட்டு பாகீரதி ஆற்றை கடந்து பக்கத்து மாவட்டமான மால்டாவில் தஞ்சமடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் ஆயுதங்களுடன் வந்து மிரட்டினர். அதற்கு பயந்து ஊரை விட்டு தப்பி ஓடி வந்தோம் என பெண்கள் கூறினர்.முர்ஷிதாபாத்தில் இருந்து வந்தவர்கள் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில்,‘‘ துலியான் பகுதியில் இருந்து 400 பேர் தப்பி ஓடி மால்டாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்’’ என்றார். ஆனால்,கலவரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் போலியானவை என்றும் இந்த புகைப்படங்களை வெளியிட்டு மத ரீதியான அடக்குமுறையினால் தான் மக்கள் வெளி மாவட்டங்களுக்கு தப்பி செல்கின்றனர் என்ற பொய்பை பாஜ பரப்பி வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

* அசாமிலும் வன்முறை
அசாம் மாநிலம், கச்சார் மாவட்டத்தில் வக்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணி நேற்று நடந்தது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். சில்ச்சார் நகரின் பெரெங்கா பகுதியில் அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கலைக்க முயன்ற போது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதையடுத்து லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தோம் என போலீஸ் அதிகாரி கூறினார்.

The post வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் கலவரம் மேற்கு வங்கத்தில் 150 பேர் கைது: கலவரத்தில் பாதிக்கப்பட்ட 400 பேர் ஆற்றை கடந்து அண்டை மாவட்டத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Related Stories: