திருவாரூர் மாவட்டத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

திருவாரூர், ஏப். 12: திருவாரூர் மாவட்டத்தில் ரூ 120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தனர். தமிழகத்தில்முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையிலானஅரசு அமைந்த பின்னர் கடந்த 2021 ம் ஆண்டு முதல் விவசாயிகளின் நலன் கருதி பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களில் தூர் வாரும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் வழக்கமான பரப்பளவை விட கூடுதலான பரப்பளவில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடப்பாண்டிலும் தூர்வாரும் பணிக்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த பணியானது திருவாரூர் உட்பட தற்போது அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணியினை நேற்று சுக்கானார் வாய்க்காலில் கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தனர். பின்னர் கலெக்டர் மோகனச்சந்திரன் கூறுகையில், 2025-26 நடப்பு நிதியாண்டில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் திருச்சி, சென்னை. மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் ஆயிரத்து 71 பணிகள் 6 ஆயிரத்து179 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ120 கோடி மதிப்பில் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் வெண்ணாறுவடி நில கோட்டம் மற்றும்தஞ்சை காவிரி வடிநில கோட்டம் என மூன்று கோட்டங்கள் மூலம் 162 பணிகள் ஆயிரத்து 327.39 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ17 கோடியே 60 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனையொட்டி திருவாரூர் மற்றும் நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட இலவங்கார்குடி, சேர்ந்தமங்கலம், வண்டாம் பாளை, வடகால் மற்றும் பள்ளி வாரமங்கலம் கிராமங்கள் வழியாக செல்லும் சுக்கானாற்றில் 6 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணியானது துவங்கி வைக்கப்பட்டுள்ளது.இதேபோன்று கோரையார் பி வாய்க்காலில் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கும், கோரையார் வடிகால் பகுதியில் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கும் தூர்வாரும் பணியானது துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாவட்டம் முழுவதும் தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டு விரைவில் முடிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கலெக்டர் மோகன் சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Related Stories: