அரியலூர் , ஏப் 12: தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி கடைகள், நிறுவனங்களின் பெயர்ப்பலகை தமிழில் அமைப்பதை கண்காணிக்க ஏதுவாக அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் தலைவராகவும், தொழிலாளர் உதவி ஆணையர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் இணை இயக்குநர், தமிழ் வளர்ச்சிதுறை உதவி இயக்குநர், அரியலூர் மாவட்ட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், உதவி இயக்குநர், கிராம ஊராட்சிகள் மற்றும் வணிக நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டு மேற்படி குழுவின் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
இக்குழு கூட்டத்தை தலைமை வகித்து நடத்திய மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அரசின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு போதிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பதை தொடர்ந்து கண்காணிக்குமாறு குழு உறுப்பினர்களுக்கு உத்திரவிட்டார்.
கூட்டத்தினை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது : அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் இதர நிறுவனங்கள் சட்டத்தில் வரையறை செய்துள்ளவாறு தமிழில் பெயர் பலகை வைக்கவேண்டும் எனவும், மேற்படி தமிழ்ப்பெயர் பலகையானது மற்ற மொழிகளை விட முதன்மையாகவும் மற்ற மொழி எழுத்துக்களைவிட பெரிய அளவிலும் பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் அமைக்கப்படவேண்டும் எனவும், மேற்படி தமிழ்ப்பெயர் பலகையினை அனைத்து நிறுவனங்களும் ஏப்ரல் 15க்குள் வைக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இக்குழுவானது வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பதை தொடர்ந்து கண்காணிக்கும் எனவும், தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் மீது உரிய குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல் தடவை அபராதம் விதிக்கப்படும் எனவும், இரண்டாம் தடவையாக முரண்பாடு கண்டறியப்படின் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பெரம்பலூர் மூர்த்தி, இணை இயக்குநர், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் அரியலூர் இளவரசி, அரசு அலுவலர்கள், அரியலூர் நகர வணிகர்கள் மற்றும் வணிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post அரியலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் 15ம் தேதிக்குள் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும்: appeared first on Dinakaran.
