தர்மபுரி, ஏப்.12: தர்மபுரி மாவட்டத்தில் கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் கண்டறிந்து கூறும் கும்பலை பிடிக்க தனியாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை மட்டுமின்றி பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர், பாலக்கோடு தாலுகா மருத்துவமனையும், பென்னாகரத்தில் அரசு தலைமை மருத்துவமனையும் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் 51 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. இங்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் அரசு மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. போதிய மகப்பேறு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிரசவத்திற்கு தனியார் மருத்துவனைகளுக்கு சென்றால், ₹30 ஆயிரம் முதல் ₹1 லட்சம் வரை செலவாகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு கர்ப்பிணி தாய்மார்கள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில் பெண் சிசு பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதனை சீர்செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பெண் சிசு கருவிலேயே கண்டறிந்து அழிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மாநில அளவில் ஒரு குழுவும், தர்மபுரி மாவட்ட அளவில் 4 குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குழுவில் 3 மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.
இந்த குழுவினர், தர்மபுரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி தலைமையில் இயங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் இதுவரை தர்மபுரி, மொரப்பூர், காரிமங்கலம், பென்னாகரம் மற்றும் ஒன்றிய கிராமங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா- பெண்ணா என ஸ்கேன் மூலம் கண்டறிந்து தெரிவித்து, பெண் சிசு கருகலைப்பு செய்ய உடந்தையாக இருந்ததாக செவிலியர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், 100 முதல் 150 பெண்களுக்கு கருகலைப்பு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்கள் பயன்படுத்திய 5 ஸ்கேன் இயந்திரங்களையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் இந்த குழுவினர் திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் சேலம் மாவட்டம் வரை நேரில் சென்று பாலினம் கூறுபவர்களையும், கருக்கலைப்பு பணியில் ஈடுபடும் நபர்களை பிடித்து, அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடைசியாக சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூரில் 2பேரை கைது செய்து அங்குள்ள அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்தனர். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் பார்க்க கர்ப்பிணி தாய்மார்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. பிரசவத்தின்போது தாய்- சேய் மரணம் இல்லை. கருத்தடை அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்- பெண் பிறப்பு விகிதச்சாரம் சற்று சரிவாக உள்ளது. பெண் சிசுக்கள் சட்டத்துக்கு புறம்பாக கருவிலேயே கண்டறிந்து கலைக்கும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 வருடத்தில் 22பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலர் குண்டாசியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
கருவில் உள்ள குழந்தைகளின் பாலினம் கண்டறியும் கும்பல்களை பிடிக்க தனியாக 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்ககள் தர்மபுரி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் சோதனை செய்ததில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கருக்கலைப்பிற்கு பயன்படுத்தும் 8 இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். கடவுள் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகளை மகாலட்சுமி எனவும், வீட்டின் அதிர்ஷ்ட தேவதை எனவும் கருதுவோர் அதிகம். மறுபுறமோ பெண் குழந்தைகளை சுமையாக கருதுவோரும் இருக்கின்றனர்.
அவர்களை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கருவிலேயே பாலினம் தெரிந்துகொண்டு கூறினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் கருவில் பெண்சிசு என கண்டறிந்து கூறினாலே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கருக்கலைப்பு பற்றிய புரிதல் இல்லாதது, அதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பின் விளைவுகள் குறித்து தெரிவதில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post கருவில் குழந்தைகளின் பாலினம் கண்டறியும் கும்பலை பிடிக்க 5 குழுக்கள் அமைப்பு appeared first on Dinakaran.
