நெல்லை, ஜன. 12: நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் திருவாதிரை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலையில் நடக்கிறது. நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் நடராஜமூர்த்தி கோயில் கொண்டுள்ள செப்பறை அழகியகூத்தர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த 4ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. 7ம் திருவிழாவான ஜன.10ம் தேதி காலையில் அழகியகூத்தர் விழா மண்டபத்திற்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு அழகியகூத்தர் சிவப்பு சாத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. 8ம் திருவிழாவான 11ம் தேதி நேற்று காலை 10 மணிக்கு அழகியகூத்தருக்கு வெள்ளை சாத்தியும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தியும் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (12ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி காலை 11 மணிக்கு அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடக்கிறது. ரதவீதிகளை வலம்வந்து தேர் நிலையம் வந்தடைந்ததும். சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதன்பின்னர் மகேஸ்வரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. நாளை (13ம் தேதி) 10ம் திருவிழா அன்று அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகம் அலங்கார தீபாராதனையும், காலை 5.30 மணிக்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், பிற்பகல் 2 மணிக்கு சுவாமி நடராஜர் திருநடன காட்சியும், மாலை 3 மணிக்கு அழகிய கூத்தர் திருவீதி உலா,
மாலை 5 மணிக்கு பஞ்சமுக அர்ச்சனையும், இரவு 7.30 மணிக்கு பிற்கால அபிஷேகம், இரவு 10 மணிக்கு அழகியகூத்தர் தாமிரசபை எழுந்தருளும் வைபவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது. இதுபோல் நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழாவில் 8ம் நாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமிக்கு வெள்ளை சாத்தி அலங்காரமும் மாலையில் பச்சை சாத்தி அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
The post திருவாதிரை திருவிழாவில் செப்பறை அழகியகூத்தர் கோயிலில் இன்று தேரோட்டம்: நாளை நடராஜர் திருநடனக் காட்சி appeared first on Dinakaran.
