புதுச்சேரி: தமிழகத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவுடனான பாஜ கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் பாஜ தலைவர் யார்? என்பதில் தொடர்ந்து சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது. புதுச்சேரியில் கடந்த ஜனவரி மாதம் அமைப்பு ரீதியிலான தேர்தலை சுமூகமாக நடத்தி முடிக்கும் வகையில், தேர்தல் பொறுப்பாளராக வானதி சீனிவாசன் எம்எல்ஏ நியமிக்கப்பட்டார். அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரியை 4 மண்டலங்களாக பிரித்து தேர்தல் நடத்தப்பட்டது. மாநில தலைவர் பதவிக்கு பல்வேறு பெயர்கள் பாஜ தலைமையின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இருப்பினும் ஒரு அமைச்சர், நியமன எம்எல்ஏ பெயர் பரிசீலிக்கப்படுவதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் ஒன்றிய பாஜ தலைவர்கள் புதுச்சேரியின் அரசியல் சூழலை பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். தமிழகத்தை ஒப்பிடும்போது புதுச்சேரியில் களநிலவரம் தற்போது வேறுமாதிரியாக இருக்கிறது. வரும் தேர்தலில் பாஜவின் முன் உள்ள சவால்கள் குறித்து அரசியல் சாரா நபர்களை வைத்து தரவுகளை சேகரித்து வருகிறது.
மாநில தலைவர் தேர்தல் பாஜ தலைமை ஒரு சர்பிரைஸ் வைத்துள்ளதாக கட்சி மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் பட்டியல் சமூகம் மற்றும் மீனவர்களை பிரதிநிதித்துவப்படுத்த திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் தலைவர் தேர்வு சுமூகமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக பாஜ தலைமை புதுச்சேரியின் மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது. எனவே இன்னும் ஒரு சில தினங்களில் புதுச்சேரி பாஜ தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று மாலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
The post தமிழகத்தில் சமரசம்: புதுச்சேரி பாஜ மாநில தலைவர் நியமனத்தில் நீடிக்கும் சஸ்பென்ஸ் appeared first on Dinakaran.