புதுடெல்லி: இந்திய அணுசக்தித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் வகையிலான புதிய ‘சாந்தி’ மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். இந்தியாவின் அணுசக்தி கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்கும் நோக்கில், கடந்த 15ம் தேதியன்று ‘சாந்தி’ எனும் அணுசக்தி மேம்பாட்டு மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. கடந்த 1962ம் ஆண்டு இயற்றப்பட்ட அணுசக்திச் சட்டம் மற்றும் 2010ம் ஆண்டு அணுசக்தி சேதப் பொறுப்புச் சட்டம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அணுசக்தித் துறையில் இதுவரை அரசின் முழுமையான ஆதிக்கம் இருந்த நிலையில், இந்தச் சட்டத்தின் மூலம் இனிமேல் இந்தியத் தனியார் நிறுவனங்களும் அணுஉலைகளை நிறுவவும், சொந்தமாக்கிக் கொள்ளவும் மற்றும் இயக்கவும் உரிமம் பெறமுடியும். இதில் தனியார் நிறுவனங்கள் 49 சதவீதம் வரை பங்கு முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வரும் 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை தற்போதைய 8.2 ஜிகாவாட்டிலிருந்து 100 ஜிகாவாட்டாக உயர்த்தவும், 2070ம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை அடையவும் இந்த மசோதா முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவை ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று மக்களவையில் முறையாக அறிமுகம் செய்தார். அப்போது, சிறிய ரக அணு உலைகளை விரைவாக அமைப்பதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் தொழிற்சாலைகளுக்குத் தேவையான சுத்தமான எரிசக்தி தடையின்றிக் கிடைக்கும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து விளக்கப்பட்டது.
அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து வழங்குவதுடன், விபத்துகளுக்கான இழப்பீடாக ரூ.100 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை வழங்குவதற்கான புதிய நடைமுறைகளையும் இந்த மசோதா கொண்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசியல் சாசன அடிப்படையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமைச்சர் இதனைத் தாக்கல் செய்தார். ‘எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை அவசியம்’ என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
