ஆனால் சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் சசிகலாவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் எழுந்தவுடன், அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சேர்த்து வைத்தார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.எடப்பாடி பழனிசாமியுடன் பாஜ கூட்டணி வைத்தது. மக்களவை தேர்தல் நேரத்தில் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வந்ததால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக எடப்பாடி அறிவித்தார்.
தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்தது. பாமக மற்றும் சிறிய கட்சிகளுடன் பாஜ கட்சி கூட்டணி வைத்தது. இரு அணிகளுமே தேர்தலில் கடும் தோல்வியை சந்தித்தனர்.இந்நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க பாஜ முயன்றது. ஆனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் கடந்த மாதம் திடீரென்று அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்ற எடப்பாடி, யாரையும் சந்திக்க வரவில்லை என்றார். பின்னர் 3 காரில் மாறி மாறிச் சென்று ரகசியமாக அமித்ஷாவை சந்தித்தார்.
பின்னர் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை, தமிழக பிரச்னைகள் குறித்து பேசினேன் என்று மழுப்பினார். எடப்பாடியும், அமித்ஷாவும் தனியாக சந்திக்கும்போது, எடப்பாடியின் உறவினர் ராமலிங்கம் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்களைக் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என எச்சரித்ததாக கூறப்பட்டது. மிரட்டலுக்கு பயந்துபோன எடப்பாடி, அண்ணாமலையை மாற்றினால் கூட்டணிக்குத் தயார் என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் மீண்டும் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி கறாராக கூறியதாக சொல்லப்பட்டது. இரு நாட்களுக்குப் பின்னர், டெல்லியில் பேட்டியளித்த அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார். இந்தநிலையில்தான் அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்தார். நேற்று காலையில் எடப்பாடி வந்து சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் மதியம் வரை அவர் வரவில்லை.
இதனால் அமித்ஷாவும் கடும் டென்ஷன் அடைந்தார். பின்னர் பாஜ மேலிடத்தில் இருந்து எடப்பாடிக்கு போன் கால்கள் பறந்தன. அவ்வளவுதான் உடனடியாக வருகிறேன் என்று கூறி நேற்று மாலை கிண்டியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோருடன் ஓடிச் சென்று சந்தித்தார்.பின்னர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கே.பி.முனுசாமி, வேலுமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமித்ஷா மட்டுமே பேட்டியளித்தார். எடப்பாடி பழனிசாமி வாயைத் திறக்காமல் அமைதியாகவே இருந்தார். அமித்ஷா கூறியதாவது: தேசிய அளவில் பாஜ தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது. ஏற்கனவே, இதே கூட்டணி தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வரும் தேர்தலிலும் இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும். வரும் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
இதற்காக அதிமுக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இருக்கும். தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி ஆட்சிதான் இருக்கும். கூட்டணியில் பங்கு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்துள்ளது இரு தரப்புக்கும் பலனை ஏற்படுத்தும். தேர்தல் நேரத்தில்தான் தொகுதிக்கான சீட்டுகள் குறித்து பேசப்படும். இந்த கூட்டணி வெற்றி பெற்றவுடன் ஆட்சியில் பங்கு குறித்து பேசப்படும். எடப்பாடி தலைமையில்தான் கூட்டணி. வெற்றிக்கு பிறகுதான் கூட்டணி ஆட்சி குறித்து தெளிவாக பேசுவோம். அதிமுகவுக்குள் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார்.
அண்ணாமலையால்தான் அதிமுக-பாஜ கூட்டணி முன்பு உடைந்தது. தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளதால், கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதா என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘அண்ணாமலை தற்போதுவரை தமிழ்நாடு பாஜ தலைவர்தான். அதனால்தான் அவர் எனது அருகில் மேடையில் இருக்கிறார்’’ என்று அமித்ஷா கூறினார். அண்ணாமலைக்கு தேசிய அளவில் பதவி வழங்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டபோது, ‘‘இது எங்கள் கட்சி விவகாரம். அதை உங்களிடம் தெரிவிக்க முடியாது’’ என்றார்.
நீட் விவகாரம், இரு மொழிக் கொள்கை குறித்து நிருபர்கள் தமிழில் கேள்வி எழுப்பியபோது, அந்தக் கேள்வியை முழுமையாக இந்தியில் மொழி பெயர்ப்பாளர் சொல்வதற்கு முன்னதாகவே, ‘‘தமிழ்நாட்டில் திமுக தொகுதி சீரமைப்பு, இரு மொழி கொள்கை, நீட் ஆகிய 3 பிரச்னைகளை எழுப்பி அவர்களின் தவறுகளை மக்கள் மத்தியில் மறைக்க பார்க்கிறார்கள். திமுக தமிழுக்காக என்ன செய்துள்ளது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா?’’ என்று அமித்ஷா கூறினார்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் எழுத பாஜ அரசு ஏற்பாடு செய்தது. சிஆர்பிஎப் தேர்வையும் தமிழில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் படிப்புகள் அந்தந்த மாநில தாய் மொழியில் நடத்தப்படும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் நடத்தப்படுவதில்லை. இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு முதல்வர் என்ன செய்தார் என்று எழுதிக் கொண்டு வந்ததை படித்தார்.
இதனிடையே நிருபர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியபோது, பதில் அளிக்காத அமித்ஷா அங்கிருந்து எழுந்து சென்று விட்டார். முன்னதாக அதிமுக, பாஜ கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் பேசி முடிவு செய்யப்படும் என்று அமித்ஷா கூறி பேட்டியை அவராக முடித்துக் கொண்டார். கடந்த மாதம் இறுதியில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து 4 கார்களில் மாறி மாறி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
பிறகு அப்போதே அதிமுக பாஜ இடையிலான கூட்டணி உறுதியானதாக பேசப்பட்டது. அதை அதிமுக மறுத்து வந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் சென்னை வந்தார். அவர் அதிமுக மற்றும் பாஜ கூட்டணியை உறுதி செய்ய வந்ததாக கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் வகையில் அமித்ஷா மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியை நேற்று மதியம் சந்தித்து பேசினர். அதை தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார்.
பிறகு நேற்று பிற்பகல் திடீரென எடப்பாடி பழனிசாமி தனது மூத்த கட்சி நிர்வாகிகளுடன் கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மூத்த நிர்வாகி முனுசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை சந்திக்க நேற்று மாலை வந்தனர். முன்னதாக அமித்ஷா கூட்டணி குறித்து சரியாக முடிவு எட்டப்படாததால் கடும் கோபத்தில் இருந்தார். இதனால் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த பிறகு தனது அறைக்கு வந்த அவர், யாரையும் தனது அறைக்குள் அனுமதிக்காமல் தனிமையில் இருந்தார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி வந்ததும்தான் அமித்ஷா தனது அறையில் இருந்து செய்தியாளர் கூட்டம் நடைபெறும் அரங்கத்திற்கு வந்தார். அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு நடத்த நேற்று முன்தினம் பாஜ சார்பில் செய்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது. அப்போது கிண்டி ஐடிசி ஓட்டலில் அமித்ஷா நேற்று 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று அறிவித்து இருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜ கூட்டணியில் இருந்து பாமக, அமுமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் பாஜ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை விட்டுவிட்டு பாஜ தலைமையை ஏற்று கூட்டணிக்கு வந்ததால், தற்போது அதிமுக கூட்டணியை நாங்கள் எப்படி ஏற்று வர முடியும் என்று கூறி பாஜ கூட்டணி கட்சியினர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. அமுமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாஜ கூட்டணியில் இருந்த பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என்று அவருக்கு 2 நாட்களுக்கு முன்பே பாஜ தலைமை அழைப்பு விடுத்து
இருந்தது.
ஆனால் அதனை அறிந்த பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக முடிவு எடுத்த பாமக தலைவர் அன்புமணியை அதிரடியாக தலைவர் பதவியில் இருந்து நீக்கிட்டு, பாமக தலைவர் இனி நான்தான் என்று ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். இதனால் பாமக சார்பில் அமித்ஷாவை சந்திக்க காத்திருந்த அன்புமணிக்கு பெரும் இடியாக விழுந்தது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அடுத்தடுத்து இடியாக யாரும் கலந்து கொள்ளாததால் அமித்ஷா தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருந்தார்.
அதன் பிறகு தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு கிண்டி ஐடிசி ஓட்டலில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைந்தது. இந்த சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர் முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமித்ஷா செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அருகில் அமர்ந்து இருந்த எடப்பாடி பழனிசாமி கடும் இறுக்கத்துடன் காணப்பட்டார். அவரை மிரட்டி பாஜ கூட்டணியில் அழைத்து வந்து அமித்ஷா அருகே அமரவைத்தது போல் உட்கார்ந்து இருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் கூட அமித்ஷா கடும் கோபத்தில்தான் இருந்தார். கேள்வி கேட்கும் செய்தியாளர்களை தனது கையை அசைத்து உட்காருங்கள் என்று கூறியபடி இருந்தார். அமித்ஷா இந்தியில் மட்டுமே பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் அவர் இந்தியில் தான் பதில் அளித்தார். இந்தியில் அமித்ஷா பேசிய போது கூட அதை தமிழில் மொழி பெயர்ப்பு செய்த நபரை கடுமையாக கடிந்து கொண்டார்.
அமித்ஷா செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை ஒரு வார்த்தை கூட பேச அமித்ஷா அனுமதிக்கவில்லை. அவரை வெறும் பொம்மை போல தனது அருகே அமித்ஷா அமர வைத்திருந்தார். அதேநேரம் எடப்பாடிக்கு இந்தி தெரியாததால், அவருக்கு அமித்ஷா என்ன பேசுகிறார் என்று புரியாமல் அமர்ந்து இருந்தார். அப்போது மொழிபெயர்ப்பாளர் அமித்ஷா பேச்சை தமிழில் பேசும்போது தான் அவருக்கு அமித்ஷா என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டார்.
அதேநேரம் மொழிபெயர்ப்பாளர் அமித்ஷா பேசிய இந்தி சரியாக தெரியாமல் பல இடங்களில் மாற்றி மாற்றி பேசினார். அதை அமித்ஷாவும் இடையில் கண்டித்தார். ஒரு கட்டத்தில் அமித்ஷா செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்றார். அப்போது எடப்பாடியை தனது கையால் தட்டி எழுந்து வாங்க என்று கூறி நிலையில் வேகமாக சென்றார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
* கிண்டி தனியார் ஓட்டலில் பாஜ கட்சி தேர்தல், கூட்டணி பற்றி பத்திகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதற்கு பல மணிநேரமாக கூட்டணி தலைவர்கள் வராததால் அமித்ஷா பத்திரிகையாளர் சந்திப்புக்காக வைக்கப்பட்ட பேனர் மாற்றப்பட்டது.
* பத்திரிகையாளர்களை மிரட்டிய அமித்ஷா
அண்ணாமலை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அமித்ஷா, எங்கள் கட்சியை நீங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் நடத்திக் கொள்கிறோம், அதை பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று ஆவேசமாக பதிலளித்தார்.
* அமித்ஷாவை பார்க்கணும்னு
அடம் பிடித்த அகோரியால் பரபரப்பு
ஐடிசி ஓட்டல் முன் ஆட்டோவில் வந்த அகோரி ஒருவர் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நான் அமித்ஷாவை பார்த்து ஒன்று சொல்லணும். முக்கியமான செய்தி சொல்லணும். அமித்ஷாவை பார்க்காமல் போகமாட்டேன் என அடம்பிடித்த அகோரியை போராடி அவர் வந்த ஆட்டோவிலேயே போலீசார் அனுப்பி வைத்தனர்.
* பேச்சுவார்த்தையின் போது மாறிய பேனர்கள்
அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு தொடர்பான மேடையில் இருந்த டிஜிட்டல் பேனர்கள் திடீர் திடீரென மாற்றம் செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பேனர் வைக்கப்பட்டது. 11.30 மணிக்கு தலைவர்கள் படம் எதுவுமின்றி பேனர் வைக்கப்பட்டது. 1.30 மணிக்கு பிஜேபி கொடி பேனர் வைக்கப்பட்டது. 2 மணிக்கு தமிழ்நாடு பாஜ என்கிற பெயரில் புதிய பேனர் வைக்கப்பட்டது. கடைசியாக 5.30 மணிக்கு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி என வைக்கப்பட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
* அண்ணாமலைக்கு தேசிய பதவியா?
அண்ணாமலைதான் தமிழக பாஜ தலைவர். அதனால் தான் அவர் என் அருகில் அமர்ந்து இருக்கிறார். அவரின் செயல்பாடுகள் தேசிய அளவிற்கும் தேவை என அமித்ஷா சூசகமாக தெரிவித்தார்.
* ஜி.கே.வாசன் புறப்பட்டதும் நாற்காலி குறைப்பு
பாஜ கூட்டணி தலைவர்கள் எல்லாரும் வருவார்கள் என்று முதல் நபராக ஜி.கே.வாசன் அமித்ஷாவை சந்திக்க வந்து சிறிது நேரம் காத்திருந்தார். மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் வராததால் அமித்ஷாவை சந்தித்து ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு பிறகு நிருபர்களை சந்திப்பதாக கூறியிருந்த அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டார். அவர் புறப்பட்டதும் மேடையில் போட்டிருந்து நாற்காலி ஒன்றை அப்புறப்படுத்தினர்.
* முன்கூட்டியே அறை எடுத்த ஓபிஎஸ்
அமித்ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் மாறி மாறி போன் செய்துள்ளார். அமித்ஷாவை சந்திக்க சென்னை பிரமுகர் ஒருவர் மூலம் முயன்றுள்ளார். இதற்காக அவர் தங்கி இருந்த ஐடிசி சோழா ஓட்டலில் அவருக்கு முன்கூட்டியே 1701 ரூம் புக் செய்து காத்திருந்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் எதிர்ப்பு காரணமாக, அமித்ஷாவை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
* மியூசிக்கல் சேர் போன்று நாற்காலி மாற்றம்
அமித்ஷா உடன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் மதியம் 12 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்திப்பதாக அறிவித்தனர். அப்போது மேடையில் முதலில் 7 நாற்காலிகள் போடப்பட்டது. பிறகு நேரம் கடந்த நிலையில் அதிமுக உட்பட கூட்டணி கட்சி யாரும் வராத நிலையில் மேடையில் போட்டிருந்து நாற்காலிகள் மியூசிக்கல் சேர் விளையாட்டில் எடுப்பது போன்று ஒவ்வொரு நாற்காலியாக குறைந்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நாற்காலி மேடையில் போடப்பட்டது.
* எழுதி வைத்ததை படித்து சென்ற அமித்ஷா
பத்திரிகையாளர்களை சந்தித்த அமித்ஷாவிடம் தமிழ், ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய போது அதற்கு முறையாக பதில் அளிக்காமல், கையை நீட்டி, ‘நீங்கள் உட்காருங்கள்..’ என்று கூறிவிட்டு இந்தியில் கேள்வி எழுப்பியவர்களை பார்த்து பதிலளித்தார். ஒரு கட்டத்தில் நிருபர்கள் மாறி, மாறி கேள்வி எழுப்பிய நிலையில் எதற்கும் முறையாக பதிலளிக்காமல் தான் எழுதி வைத்திருந்ததை மட்டுமே முழுமையாக படித்துவிட்டு சட்டென்று புறப்பட்டார். அதை தொடர்ந்து எடப்பாடியிடம் கேள்வி எழுப்பிய போது அவரும் பதிலளிக்காமல் புறப்பட்டார்.
The post நிபந்தனையை ஏற்று அண்ணாமலை மாற்றம் எதிரொலி அதிமுகவுடன் பாஜ கூட்டணி: எடப்பாடி – அமித்ஷா கூட்டாக அறிவிப்பு, கடைசி வரை வாயே திறக்காமல் சென்ற அதிமுக தலைவர்கள் appeared first on Dinakaran.