தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இதனால் தனக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று பல்வேறு தலைவர்களை சந்தித்து அவர் கோரிக்கை விடுத்து வருகிறார். குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த ஆடிட்டரை கடந்த 3 மாதங்களாக சந்தித்துப் பேசி வருகிறார். மேலும் டெல்லி சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்னர் பெங்களூரு சென்றவர், அங்கு முக்கிய மடாதிபதியை சந்தித்து, அமித்ஷாவிடம் தனக்கு மாநில தலைவர் பதவியை வாங்கித் தரும்படி கேட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீங்கினால் கூட்டணிக்கு வர தயார் என்று ஏற்கனவே அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். இதை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, அதிமுக முன்னாள் நிர்வாகிகளை கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை எடப்பாடி பழனிசாமியிடம் விதித்தார். ஆனால் இதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கோபத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அழைத்துப் பேசினர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காமல் உள்ளார்.
எனவே, அண்ணாமலையை மாற்றும் முடிவுக்கு மேலிடம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த வாரம் சென்னை வந்த நிர்மலா சீதாராமன், மாநில தலைவர் பதவியை மாற்றுவது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுடனும் தனியாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன், ஆனந்தன் அய்யாச்சாமி ஆகியோரை மாநில தலைவராக நியமிப்பது குறித்து மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நயினார் நாகேந்திரனுக்கு சில முக்கிய தலைவர்கள் ஆதரவாக உள்ளனர். ஆனந்தன் அய்யாச்சாமிக்கு, தென்காசியை சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன தொழிலதிபர் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஆகியோர் உள்ளனர். ஆனந்தனும் கடந்த இரு நாட்களாக சென்னையில் தங்கி தலைவர்களை சந்தித்து வருகிறார். இதனால் மாநில தலைவர் பதவிக்கு இருவருக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் இந்த மாநில தலைவர் போட்டியில் கே.டி.ராகவனும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு 10.30 மணிக்கு சென்னை வந்தார். அவரை அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அங்கு அண்ணாமலை மட்டும் சந்தித்துப் பேசினார். இன்று காலை முதல் மாலை வரை கட்சி நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்துப் பேசுகிறார். மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ளார். சட்டப்பேரவை கூட்டம் 5 நாட்கள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு தலைவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். எடப்பாடி மட்டும் போகாமல் உள்ளார்.
இதனால் அவர், அமித்ஷாவை சந்திக்க வரவேண்டும் என்று பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி சந்திக்கும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு எடப்பாடி சம்மதித்தால், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோரை இன்று அமித்ஷா சந்திப்பார். அப்போது 3 பேரையும் ஒன்று சேர்த்து வைப்பார். அதற்கு சம்மதிக்காவிட்டால், பின்னர் ஒருநாள் கட்சியில் சேர்க்கும்படி கூறுவார். இதற்காக அவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும்படி பாஜ கூறியுள்ளது. டிடிவி.தினகரன் சென்னையில் உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இன்று காலையில் சென்னை வருகிறார். ஆனால் அவர்கள் இருவரையும் இன்றே சந்திக்க எடப்பாடி மறுத்து விட்டால், அமித்ஷாவும் அவர்கள் இருவரையும் சந்திக்காமல் சென்று விடுவார் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர், மாலையில் ஆடிட்டர் ஒருவரையும் அமித்ஷா சந்தித்துப் பேசுகிறார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அமித்ஷாவின் வருகை பாஜ, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்துடைப்பு நாடகம் 12ம் தேதி அறிவிப்பு
பாஜ மாநில தலைவர் பதவி நியமனம் குறித்து இன்று அமித்ஷா முடிவுகளை எடுக்கிறார். இன்று கட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலும் நடக்கிறது. கட்சியின் மேலிட பிரதிநிதிகளான கிஷன்ரெட்டி இன்று சென்னை வருகிறார். அவர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார். 12ம் தேதி (நாளை) சென்னை வாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் புதிய தலைவர் அறிவிக்கப்படுகிறார். கட்சியில் 10 ஆண்டுகள் தீவிர உறுப்பினராக இருக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. நேற்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் இதெல்லாம் வெறும் கண்துடைப்புதான். கட்சி மேலிடம் நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் தலைவர் பதவியை வழங்கும். அப்படித்தான் அண்ணாமலைக்கும் வழங்கினார்கள். இப்போதும் அப்படித்தான் அறிவிப்பு இருக்கும் என்கின்றனர்.
The post அண்ணாமலை பதவி மாற்றம்? அதிமுக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்: எடப்பாடியும் சந்திக்க வாய்ப்பு appeared first on Dinakaran.
