செய்யாறு, ஜன.3: பெண்ணை மனபங்கப்படுத்தியவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனையை செய்யாறு குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கடந்த 29-8-2019 அன்று இரவு சுமார் 8:30 மணி அளவில் காந்தி சாலையில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு தனது மொபட்டில் பைபாஸ் ரோடு மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர் இளம்பெண்ணை வழிமடக்கி, துப்பட்டாவை பிடித்து இழுத்துள்ளார். இதனால் தவறி கீழே விழுந்த இளம்பெண் கீழே சிதறிய மளிகைப் பொருட்கள் பாக்கெட்டுகளை எடுக்கும்போது அந்த மர்ம நபர் இளம்பெண்ணை ஆபாசமாக பேசி திட்டி இதை வெளியே சொன்னால் உன்னை ஒழித்து விடுவேன் என்று மிரட்டி மானபங்கப்படுத்தி உள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண் நடந்த விவரத்தை தனது கணவரிடம் தெரிவித்து, அன்றிரவு செய்யாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணிடம் மானபங்கம் முயற்சியில் ஈடுபட்ட நபர் செய்யாறு அடுத்த பல்லி கிராமம் சேகர் மகன் முத்துராஜ்(36) என்பது தெரிய வந்தது. அவரை செய்யாறு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த செய்யாறு குற்றவியல் நீதிமன்ற நடுவர் கே.ஆர்.பாலாஜி குற்றவாளி முத்துராஜிக்கு 3 ஆண்டு மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
