செய்யாறு, டிச.25: செய்யாறு அருகே கட்டிலில் படுத்துக் கொண்டு பீடி புகைத்த முதியவர் தீயில் கருகி பலியானார். செய்யாறு அடுத்த கிளியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(43), டிரைவர். இவரது தந்தை மாரிமுத்து(75). பீடி புகைக்கும் பழக்கத்திற்கு ஆளான மாரிமுத்துக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதாம். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் பீடி புகைக்கும் பழக்கத்தை கைவிடவில்லையாம். இந்நிலையில், கடந்த 22ம் தேதி மாரிமுத்து வீட்டில் உள்ள கட்டிலில் படுத்துக் கொண்டே பீடியை புகைத்துள்ளார். அப்போது, தீப்பொறிகள் பட்டு மெத்தையில் தீப்பிடித்தது. இதனால் பலத்த தீக்காயம் அடைந்த மாரிமுத்துவை, குடும்பத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் மாரிமுத்து நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில் செய்யாறு சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
