வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் ஒருவர் கைது தண்டராம்பட்டு அருகே

தண்டராம்பட்டு, டிச. 30: தண்டராம்பட்டு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு பதுக்கி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த நாச்சானந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் பழைய கல்குவாரி பகுதியில் நாட்டுத்துப்பாக்கியை ஒருவர் மறைத்து வைத்திருப்பதாக மாடு மேய்க்கும் நபர் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நேற்று வாணாபுரம் போலீசார் கல்குவாரி பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மஞ்சம்பில் பகுதியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அதனை பறிமுதல் செய்து, இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் தினமும் மதிய வேளையில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(46) என்பவர் அந்த கல்குவாரிக்கு வந்து செல்வதாக தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் கார்த்திக்கை மடக்கி பிடித்து அழைத்து வந்து விசாரித்தபோது வனவிலங்குகளை வேட்டையாட ஜவ்வாது மலை பகுதியிலிருந்து ரூ.7000க்கு நாட்டு துப்பாக்கி வாங்கி வந்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்த நாட்டுதுப்பாக்கிக்கு பயன்படுத்தக் கூடிய பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் கார்த்திக்கை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: