ஒன்றிய அரசை கண்டித்து ஒப்பாரி வைத்த பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தை முடக்கும்

வந்தவாசி, டிச.25: நூறு நாள் வேலை திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து வந்தவாசியில் பெண்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டத்தை கடந்த 2007ம் ஆண்டு திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், கிராம மக்கள் மேம்பட தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய பாஜ அரசு இத்திட்டத்திற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் புறக்கணித்து வருகிறது. இதனால் இத்திட்டம் மூலமாக பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பெருமளவில் பணம் வராமல் நிதிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில், 60 சதவீதம் ஒன்றிய அரசு, 40 சதவீதம் மாநில அரசு நிதியுடன் இத்திட்டத்தை செயல்படுத்தவும், மகாத்மா காந்தி பெயரில் உள்ள இத்திட்டத்தை மாற்றி வேறு பெயர் வைத்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேலும், இத்திட்டத்தை முடக்கும் நிலை உண்டாக்கி உள்ளதால் ஒன்றிய பாஜ அரசை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் அதிமுகவை கண்டித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்து பிடிஓ அலுவலகங்கள் முன்பு நடத்தினர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பிடிஓ அலுவலகம் முன்பு எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, மேடையில் இருந்தவர்கள் பாஜ அரசுக்கு எதிராகவும் பாஜவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்கும் அதிமுகவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதற்கிடையில், மேடையில் இருந்தவர்களிடமிருந்து மைக்கை கேட்ட அமுதூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பையன் மனைவி பார்வதி(60) என்பவர் தலைமையில் பெண்கள் ஒப்பாரி வைத்து, 100 நாள் வேலை திட்டத்தை முடக்க நினைக்கும் பிரதமர் மோடியையும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளவர்களையும் புறக்கணிப்போம் என தொடர்ந்து 10 நிமிடம் ஒப்பாரி வைத்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

Related Stories: