புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் பின்புறத்தில் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆலங்குடி கலிபுல்லா நகர் ஏடி காலனியை சேர்ந்த அர்ஜத் 8ம் வகுப்பும், அவரது சகோதரன் முகமது யூனுஸ் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தேர்வுக்கு சகோதரர்கள் வரவில்லை. இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் சூசைராஜ், பைக்கில் ஒரு மாணவனை அழைத்து கொண்டு சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்த சகோதரர்கள், அருகே உள்ள முந்திரி காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டனர். இதனால் தலைமையாசிரியர் பள்ளிக்கு திரும்பி விட்டார்.
பின்னர் காலை 10 மணிக்கு பிறகு மீண்டும் தலைமை ஆசிரியர், மாணவர்களின் வீட்டுக்கு சென்று, பெற்றோரிடம் விசாரித்தபோது அவர்கள் அருகில் உள்ள கயிறு தொழிற்சாலையில் ஒளிந்திருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்றபோது, அப்பகுதியில் உள்ள தைல மரக்காட்டுக்குள் மாணவர்கள் ஓடினர். அவர்களை தலைமையாசிரியர் பிடித்து அவர்களது தாயிடம் ஒப்படைத்தார். இதையடுத்து மாணவர்களின் தாய், இருவரையும் சீருடை அணிய வைத்து பள்ளிக்கு தலைமையாசிரியருடன் அனுப்பி வைத்தார். பின்னர் இருவரையும் அவரது பைக்கிலேயே அழைத்து வந்து பள்ளியில் தேர்வு எழுத வைத்தார். தேர்வுக்கு டிமிக்கி கொடுத்த மாணவர்களை தலைமையாசிரியர் தேடி பிடித்து அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த சம்பவம் பெற்றோர்கள், கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post முந்திரி காட்டுக்குள் ஓடிய மாணவர்களை பிடித்து தேர்வு எழுத வைத்த ஹெச்.எம். appeared first on Dinakaran.