கடந்த 8 மாதங்களில் 1.52 லட்சம் வெளிநாட்டினர் வருகை: சர்வதேச சுற்றுலா பிராண்டாகிறது மதுரை

  • சுற்றுலாப்பயணிகள் விருப்ப பட்டியலில் ‘டாப்’
  • சுற்றுலா சார்ந்த முதலீடுகளும் அதிகம் தேவை

மதுரை : கடந்த 8 மாதங்களில் 1.52 லட்சம் வெளிநாட்டினர் வருகையால் மதுரை உலகளாவிய சுற்றுலா பிராண்டாக மாறி வருகிறது.கிழக்கின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் மதுரை, உலகில் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்று. வணிக நகரமாக விளங்கிய மூதூர் மதுரை அன்று தொட்டு இன்று வரை பண்பாட்டு தலைநகராகவும், ஆன்மிகம், சுற்றுலா என பல தளத்தில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. பழமை மாறாத மதுரையின் நகர் அமைப்பு, 2,000 ஆண்டுகளுக்கு மேலாக பண்பாட்டை சுமந்து நிற்கும் மிகவும் பழமையான நகரம் என்பதால், தமிழக சுற்றுலா இடங்களில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டினரின் தவிர்க்க முடியாத சுற்றுலா இடமாக மதுரை உள்ளது.

தென் தமிழகத்தின் எந்த ஒரு முக்கிய இடத்திற்கு செல்ல வேண்டுமென்றாலும் அதற்கு மைய இடமாக விளங்குவதும் மதுரை தான். இங்கிருந்து தான் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக்கானல், பழநி, மூணாறு போன்ற சுற்றுலா இடங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த வகையில் தென் தமிழகத்தில் சுற்றுலாப் பயணத்தின் நுழைவாயிலாக மதுரை உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

குவிந்து கிடக்கும் சுற்றுலா இடங்கள்:மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், கீழடி அருங்காட்சியகம், அழகர்கோவில், சமணர் மலை, முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம், ஆறாம் படை வீடான சோலைமலை, திருமலை நாயக்கர் மகால், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், வானில் இருந்து பார்த்தால் சிலுவை போல் காட்சியளிக்கும் தூய மரியன்னை ஆலயம், காஜிமார் பெரிய பள்ளிவாசல், கோரிப்பாளையம் தர்கா என மதுரை எண்ணற்ற சுற்றுலா இடங்களை தனக்கென பிரத்யேகமாக கொண்டுள்ளது. இதன் காரணமாகவே, மதுரைக்கு வரும் வெளிநாட்டு, வெளிமாநில விருந்தாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மதுரை முதலிடம்:
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின் படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகையில் சென்னை, கோவை உள்ளிட்ட முக்கியமான தமிழ்நாட்டு நகரங்களைப் பின்னுக்குத் தள்ளி மதுரை தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 2025 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 3.75 கோடி பேர் வந்துள்ளனர். வெளிநாட்டினர் 2.45 லட்சம் பேர் வந்துள்ளனர். அதில், மதுரைக்கு 20,12,721 வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள், 1,52,612 வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் என மொத்தமாக 21,65,333 பேர் வருகை தந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் சுற்றுலா பிராண்டாக மதுரை மாறி வருகிறது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

24 மணி நேரமும் தூங்காத நகரம்:
மதுரையில் சுற்றுலா வளர்ச்சிக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் நிறைந்துள்ளன. சர்வதேச விமான சேவை, 24 மணி நேரமும் ஓடிக் கொண்டே இருக்கும் ரயில்களுடன், தூங்காமல் எப்ேபாதும் விழித்துக் கொண்டே இருக்கும். அதனாலே மதுரைக்கு தூங்காநகரம் என்ற பெயரும் இருக்கிறது. மதுரையை மையமாக வைத்து பல வகையான சுற்றுலா திட்டங்களும் உள்ளன. ஆன்மிக சுற்றுலாவிற்கு மதுரை- ராமேஸ்வரமும், தேனிலவு மற்றும் விடுமுறைக்கால சுற்றுலா வழித்தடமாக மதுரை – கொடைக்கானல் ஆகிய இரண்டு முக்கிய சுற்றுலா வழித்தடங்களும் உலகளவில் பிரபலமாக உள்ளன.

உலகளாவிய சுற்றுலா பிராண்ட் ‘மதுரை’:
மதுரை உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி குழும ஆலோசகர் டாக்டர் மகேந்திரவர்மன் கூறுகையில், ‘‘ஆன்மிகம், உணவு, கலாசாரம், வரலாறு மற்றும் நவீன வளர்ச்சி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மதுரை, தென் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி வருகிறது. இதை மேலும் அதிகரித்து, மதுரையின் பொருளாதாரத்தை உயர்த்திட, மதுரை விமான நிலையத்தை முழுமையான சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும். இதன் மூலம் ஆசியான் மற்றும் வளைகுடா நாடுகளுடனான இரு வழி ஒப்பந்தங்களில் மதுரை சேர்க்கப்படும். மதுரையை ஒரு உலகளாவிய சுற்றுலா பிராண்டாக உருவாக்க வேண்டும். சுற்றுலா சார்ந்த முதலீடுகளை மதுரையைச் சுற்றி ஈர்க்க வேண்டும். தென் தமிழகத்தில் இருந்து அதிகமான சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க வேண்டும். ஐஐடிடிஎம் எனப்படும் சுற்றுலா சார்ந்த படிப்புகளுக்கான ஒன்றிய கல்வி நிறுவனத்தை மதுரையில் நிறுவ வேண்டும்’’ என்றார்.

Related Stories: