உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம்

மயிலாடுதுறை, ஏப். 9: மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்த நிலையில், உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியதை திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில், அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாற்றி முதலமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இந்த தீர்மானங்களை ஆளுநர் நிராகரித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று தெரிவித்து பத்து மசோதாக்களுக்கும் அனுமதி வழங்கியது.

இதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறையில் திமுக சார்பில் பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திமுக நகர செயலாளரும், நகர மன்ற தலைவருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இதில் மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருதமுத்து நகர மன்ற உறுப்பினர்கள் ஏராளமான திமுகவினர் பங்கேற்று வாழ்த்து முழக்கங்களை எழுப்பினர்.

The post உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மயிலாடுதுறையில் திமுகவினர் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: