சத்தியமங்கலம்: ‘‘அம்மா தாயே…. பண்ணாரி அம்மா’’ என பக்தி கோஷம் முழங்க பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர் வனப் பகுதியில் பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று அதிகாலை தொடங்கியது. முன்னதாக கோயில் முன்பு தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பண்ணாரி அம்மன் சப்பரத்துடன் மேளதாளம் முழங்க தெப்பக்குளத்திற்கு சென்று அங்கிருந்து தீர்த்தம் எடுத்து அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குண்டத்தின் முன்பு மேளதாளம் முழங்க ‘அம்மா தாயே பண்ணாரி அம்மா’ என பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க அதிகாலை 3.45 மணியளவில் தலைமை பூசாரி ராஜசேகர் குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்றவைத்து குண்டத்தின் மீது பூபந்து உருட்டி அம்மனிடம் வரம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு தலைமை பூசாரி ராஜசேகர் குண்டம் இறங்கினார். பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் வீணை அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தபின் கோயில் வளாகத்தை விட்டு வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. குண்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் பக்தர்கள், மாற்றுத்திறனாளிகள், போலீசார், தீயணைப்பு வீரர்கள், திருநங்கைகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தீமிதித்து பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தார். குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதிய நிலவரப்படி லட்சம் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.
குண்டத்தைச் சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் குண்டம் இறங்கும் பக்தர்கள் தீக்காயம் படாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் குண்டத்தின் அருகில் தயார் நிலையில் இருந்தனர். குண்டம் இறங்கும் நிகழ்ச்சியை கண்டு களிக்க கோயில் வளாகத்தில் பல்வேறு பகுதிகளில் பெரிய திரை கொண்ட எல்இடி டிவிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
The post பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா: லட்சம் பக்தர்கள் நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.